சென்னை: கடந்த மார்ச் 20 மற்றும் 21 ஆகிய தேதிகள் முறையே பொது பட்ஜெட்டும், வேளாண் பட்ஜெட்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை சார்ந்த மானிய கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று (ஏப்.19) நடந்த இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.
அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு, 'திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுவரை ரூ.4,262 கோடி மதிப்புள்ள 4,578 ஏக்கர் பரப்புள்ள நிலம், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுக் கால ஆட்சியில் ரூ.3,819 கோடி மதிப்புள்ள 3,177 ஏக்கர் நிலங்கள் மட்டுமே மீட்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், அதை ஒப்பிடுகையில் அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுக் காலத்தில் மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பை விட 1,085 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,401 ஏக்கர் நிலத்தைக் கூடுதலாக இரண்டே ஆண்டுகளில் மீட்டுள்ளோம் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். ஆன்மிக நால்வரான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போல திராவிட நால்வராக இருக்கும் பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் வழியில் நடப்பதால் இந்த அரசு இராஜகோபுரமாய் உயர்ந்து நிற்கிறது என்றார்.
அரசுத் துறைகளிலேயே அதிகமாகக் குறி வைக்கப்படுவதும் கவனிக்கப்படுவதுமாக இருப்பது இந்து சமய அறநிலையத்துறை தான் எனவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறையைக் கலைப்போம் என்று ஒரு சிலர் கதறிக் கொண்டிருப்பதாகவும் சூசகமாகத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், 'இது எப்படி இருக்கிறது என்றால், வயலுக்கு வேலி எதற்கு என்று காளை மாடு கவலைப்படுவது போல் உள்ளது' என்றும் விமர்சித்தார்.
மேலும், நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஆன்மிகத்தில் சமூக நீதி காக்கும் இந்து சமய அறநிலையத்துறையை எங்கள் முதலமைச்சர் இருக்கும் வரை யாராலும் எப்பொழுதும் எதுவும் செய்து விட முடியாது' எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திண்டுக்கல் - குமுளி சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு