சென்னை, தலைமை செயலகத்தில் நடிகர் நாசர், பூச்சி முருகன், ராஜேஷ் ஆகியோர் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை சந்தித்துப் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனையின் பேரில் திரைத்துறையைச் சேர்ந்த சங்கங்களை அழைத்து, துறை சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கும் வகையில் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது அவர்கள் சின்னத்திரை படப்பிடிப்பில் 80 பேரும் பெரிய திரை படப்பிடிப்பில் 150 பேரும் கலந்து கொள்ள அனுமதி கேட்டனர்.
திரைத்துறை தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர். திரைத்துறையினர் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் இந்தக் கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
ஊரடங்கு முடிந்த பின்னர் திரையரங்கு திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். ஓடிடி தளத்தில் படங்களை வெளியிடுவது குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். சினிமாவில் கரோனா பாதிப்பு குறித்த பதட்டமான கட்சிகளை காட்ட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளோம்" என்றார்.
இதைத் தொடர்ந்து நடிகர் நாசர் தெரிவித்ததாவது, "பெருந்தொற்றுக் காலத்தில் நடிகர்கள், நாடகக் கலைஞர்கள் வேலையின்றி முடங்கிக் கிடக்கின்றனர். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக வேலையின்றி இருக்கும் அவர்களுக்கு, அரசு செய்ய வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும். ஊரடங்கிற்குப் பின்னர் படப்பிடிப்பு குறித்து அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: 'குக்கூ.. குக்கூ.. நர்ஸூ பண்ணும் சேவைக்கு..' - வைரல் வீடியோ!