சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த திமுக அரசு, கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல்செய்தது. வரும் 21ஆம் தேதிவரை நடைபெற உள்ள நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில், பல்வேறு துறைகளில் அறிவிக்கப்பட்ட மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 2) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கேள்வி - பதில் நேரத்தில், திருப்பத்தூர் தொகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தரக்கோரி, திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி கோரிக்கைவிடுத்தார்.
அப்போது நடைபெற்ற உரையாடல் பின்வருமாறு:
அமைச்சர் மெய்யநாதன்: இளைஞர் நலனில் அக்கறை கொண்டும், விளையாட்டுத் துறையை மேம்படுத்திடவும் முதலமைச்சர் பல்வேறு வகைகளில் ஊக்கப்படுத்திவருகிறார். அதன்படி விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும்விதமாக, ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறும் முன்னதாகவே தங்கம் வென்றால் மூன்று கோடி ரூபாய், வெள்ளி வென்றால் இரண்டு கோடி ரூபாய், வெண்கலம் வென்றால் ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு, இரண்டு கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. மேலும், வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
அனைத்து மாவட்ட தலைநகரங்களில் திறந்தவெளி மற்றும் உள்விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம் ஏற்படுத்தித் தரப்படும் என ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். அதன்பின்பு கிராமப் பகுதியிலும் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ஏலகிரியில் ஒரு ஏக்கரில், நான்கு கோடி ரூபாய் செலவில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான டெண்டர் விடப்பட்டு, ஸ்டாலினே உள் விளையாட்டு அரங்கத்தினைத் திறந்துவைப்பார்.
நல்லதம்பி எம்எல்ஏ: திருப்பத்தூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏலகிரி எங்களது மாவட்டத்தில் வராது. ஆகவே, எங்களது தொகுதிக்குத் தனி விளையாட்டரங்கம் அமைத்துத் தர வேண்டும்.
மெய்யநாதன்: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் அரசாக திமுக அரசு உள்ளதால், அந்தப் பகுதியில் மைதானத்திற்குத் தேவையான இடம் கண்டறியப்பட்டு, முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று மைதானம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு உரையாடல் நடைபெற்று முடிந்தது.
இதையும் படிங்க: பொது சொத்துகளை விற்பது தேச நலனுக்கு எதிரானது - மு.க. ஸ்டாலின்