சென்னை: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத் துறை, அண்ணாப் பல்கலைகழகம் இணைந்து சுற்றுலாத் துறையில் வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கை சென்னை அண்ணாப் பல்கலைக்கழகத்தில் நடத்தியது.
இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட சுற்றுலாத் துறை அமைச்சர் மதி வேந்தன், 'WOW தமிழ்நாடு' என்ற சுற்றுலா தலங்கள் குறித்த சிறப்புகளை தெரிவிக்கும் காணொலியையும், தமிழ்நாட்டில் இருக்கும் 75 சுற்றுலா தலங்களுக்கான காணொலிகளையும் வெளியிட்டார். தமிழ்நாடு ஹோட்டல்களை தனியார் செயலி மூலம் பதிவு செய்வதற்கான வசதியையும் அவர் தொடங்கிவைத்தார்.
WOW தமிழ்நாடு
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுற்றுலாத் துறை மேம்படுத்துவதற்கு 30 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில் இரண்டு அறிவிப்புகளை இங்கு தொடங்கியுள்ளோம்.
'வாவ் தமிழ்நாடு' என்ற இணையவழி ஒளிப்படக்கலை மற்றும் காணொலிப் போட்டி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்கள் குறித்து புகைப்படம், காணொலிகளை அதிகாரப்பூர்வ இணையதளமான wowtamilnadu.com என்ற இணையதளத்தில் டிசம்பர் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம்.
75 சுற்றுலா தலங்களின் வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு அவை வெளியிடப்படவுள்ளன. சுற்றுலாத் தலங்களில் உள்ள சிறப்புகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பொதுமக்கள் ஸ்கேன் செய்து அந்த சுற்றுலாத் தலங்களை நேரடியாக கண்டுகளிக்கும் வகையில் மெய் உணர் அஞ்சல் அட்டைகள், துண்டுப் பிரசுரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுலாத் துறை பெரும் பாதிப்பு
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றுலாத் துறை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. சுற்றுலாவின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில் மக்களின் உயிரும் முக்கியமாக பார்க்கப்பட வேண்டியது. எனவே, அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப சில கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழ்நாடு ஹோட்டல்களில் சில ஹோட்டல்கள் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது; அவற்றை ஆய்வு செய்து படிப்படியாக அனைத்து ஹோட்டல்களையும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அதனை தற்போதைய காலத்திற்கு ஏற்ப புதுமைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஹோட்டலை புதுப்பிக்க நடவடிக்கை
சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் எந்தெந்த இடங்களில் தனியார் பங்களிப்புடன் பணிகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம். புதிதாக தமிழ்நாடு ஹோட்டல் தொடங்க எவ்வித முயற்சியும் இல்லை. ஆனால், இருக்கும் ஹோட்டல்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
சுற்றுலாத் தலங்களில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை பயன்படுத்தவும், அது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பினை வலியுறுத்துவோம்" என்றார்.
இதையும் படிங்க: சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்- சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு