சென்னை: மேட்டூர் சட்டப்பேரவை தொகுதி பாமக உறுப்பினர் சதாசிவம் சட்டப்பேரவையில் பேசியதாவது, “முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுக்கின்றனர். அறுவை சிகிச்சைகளுக்கு முதலைமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை குறைவாக இருக்கிறது. எனவே இந்த தொகையை அதிகரிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதலமைச்சரின் காப்பீடு திட்டம் தற்போது வரை நாட்டிலேயே சிறந்த மருத்துவ காப்பீடு திட்டமாக முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஆட்சியில் 699 ரூபாய் சந்தா செலுத்தப்பட்ட நிலையில் தற்போது 849 ரூபாய் பிரீமியம் தொகையாக ஒரு குடும்பத்திற்கு செலுத்தப்படுகிறது” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், காப்புறுதி தொகை 2 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் மேலும் 1450 சிகிச்சைகள் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலையில் தற்போது அதனை 1513 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவித்தார். மேலும், தற்போது 1275 மருத்துவமனைகளில் சிகிச்சைகள் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் மருத்துவமனைகளில் சிகிச்சை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் கணைய மாற்று அறுவை சிகிச்சை , இருதய மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை மட்டுமின்றி உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைகள் 22 லட்சம் ரூபாய் அளவில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். ஒன்றிய அரசு தனது ஆய்வு அறிக்கையில் தமிழக அரசு அதிக தொகை மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு செலவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசு முதலமைச்சர் காப்பீடு மற்றும் மருத்துவத்திற்கு அதிக செலவு செய்வதால் ஏழை எளிய மக்களின் செலவு குறைந்து அவர்களின் வறுமை நிலை குறைந்துள்ளதாக தெரிவித்தார். ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் என 5 ஆண்டுக்கு 7500 கோடி ரூபாய் முதலமைச்சரின் மருத்துவர் காப்பீடு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 956 தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் ஒருவராகவும் தங்கள் சிகிச்சை தேவையான வசதிகள் இருக்கக்கூடிய மருத்துவமனைகளில் சிகிச்சைகள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார். பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 77 லட்சம் பேர் மட்டுமே பயன்பெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் ஒரு கோடியே 39 லட்சத்து 87 ஆயிரத்து 495 பேர் பயன்பெற்று வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: இன்னும் 10 ஆண்டுகளில் குழந்தைகளின் கல்வி தலைகீழாக மாற்றப்படும்: அண்ணாமலை