சென்னை: ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் உணவு பாதுகாப்புத்துறையின் இணையதளம் மற்றும் நுகர்வோர் குறை தீர்ப்பு செயலியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “"உணவு பாதுகாப்புத்துறையின் இணையதளம் மற்றும் கைபேசி செயலியில் பொதுமக்கள் குறை தீர்ப்பு செயலி இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகளை பொதுமக்கள் எளிதாக பயன்படுத்த முடியும். உணவு ஆய்வகங்கள் முகவரி, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்பு எண்கள் போன்றவை இந்த இணையதளம் மற்றும் செயலியில் கிடைக்கும்.
உணவு வணிகர்கள் சட்டங்களை எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டு மாம்பழங்களை விற்பனை செய்யும் வியாபரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் ரூ.9 லட்சம் மதிப்பிலான 16 ஆயிரம் கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு கடந்த காலங்களில் இருந்த தொகையை விட கூடுதல் தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது. முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மதிப்பு இரண்டு லட்சத்தில் இருந்து 5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக தற்போது அதிகரித்துள்ளது.
முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தாத தொகைகள் திரும்ப அரசுக்கு வந்து விடுகிறது. அது தனியார் மருத்துவமனைக்கே செல்கிறது என்ற செய்தி தவறானது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு பணம் செல்வது தாமதம் ஏற்படுவதை கவனத்திற்கு கொண்டு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
கோடை காலத்துல் நுங்கு, இளநீர் ஆகியவைகளுக்கு பின் மக்களை அதிகளவில் ஈர்ப்பது மாம்பழம் தான். கோடைகால சீசனில் மட்டுமே கிடைக்கும் என்பதால் மாம்பழங்களுக்கு மவுசு கொஞ்சம் ஜாஸ்தி. மாங்களைகளை சிலர் வீடுகளில் அரிசிக்குள் மூடி வைத்து பழுக்க வைப்பார்கள். முன்பெல்லாம் கடைகளில் வைக்கோல் போட்டு மூடி வைத்து பழக்க வைப்பார்கள். இயற்கை சார்ந்த இந்த முறைகளால் யாருக்கு எந்த பின்விளைவுகளும் ஏற்படுவதில்லை.
ஆனால் குறுகிய இந்த மாம்பழ சீசனில் அதிகளவில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்ற வியாபார நோக்கத்தில் தற்போது கார்பைட் கல், ரசயானம் மூலம் செயற்கை முறையில் டன் கணக்கான மாம்பழங்கள் விரைவாக பழுக்க வைக்கப்படுகின்றனர். இந்த மாம்பழங்களை சாப்பிடுவதன் மூலம் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதனால் உணவு பாதுகாப்பு துறையினர் கோடைகாலங்களில் செயற்கை முறையில் பழக்க வைத்த மாம்பழங்களை அதிகளவில் பறிமுதல் செய்கின்றனர்.