சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கடந்த மாதம் 15ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இன்றோடு 20 நாட்கள் நிறைவடைந்துள்ளது.
இந்த மருத்துவமனையை திறந்து வைக்கப்பட்ட நாள் முதல் தொடர்ச்சியாக இங்கே நாள்தோறும் சிகிச்சைக்கு பொதுமக்கள் பெரியளவில் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு நாளும் சுமார் 300 முதல் 400 பேர் சிகிச்சைக்காக புற நோயாளிகளாக வருகின்றனர். 15ஆம் தேதியிலிருந்து இன்று வரை இங்கே சிகிச்சைக்காக வந்தவர்கள் எண்ணிக்கை 5,176 ஆகும். மேலும் ரத்தப் பரிசோதனை, சிடி ஸ்கேன் போன்ற பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
3ஆம் தேதியிலிருந்து உள்நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களாக 22 பேர் இங்கே உள்நோயாளிகளாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த மருத்துவமனைக்கு சென்னையில் இருந்து மட்டுமல்லாது, பக்கத்து மாவட்டத்தில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இங்கு டயாலிசிஸ் வார்டு மற்ரும் அறுவை சிகிச்சை அரங்கு 15 உள்ளது. திங்கள்கிழமை முதல் இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் தொடங்க உள்ளது. காப்பீட்டு திட்டத்தின் கீழும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். மேலும், இந்த மருத்துவமனையில் நடைபெறக்கூடிய பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாக நிறைவடையும். தொடங்கிய சில நாட்களே தினமும் 400 பேர் வந்து செல்வது சாதனைதான். இங்கு மொத்தம் 133 மருத்துவர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த மருத்துவமனையில் அதிதொழில்நுட்பக் கருவிகள் அனைத்தும் இருக்கின்றன" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தை அரசியல் ஆக்குவதும், பரபரப்பாகுவதும் சங்கடமாக இருக்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு 50க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பெற்றிருக்கிறோம்" என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “குட்கா போதையிலும், மது போதையிலும் இருந்து விட்டு, தற்போது சுகாதாரத்துறை, ஐசியூவில் இருப்பதாக விஜயபாஸ்கர் பேசுகிறார். முடிந்தால் அவரை நேரடியாக அழைத்து வந்து பேச வையுங்கள், நான் பதிலளிக்கிறேன்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அதிமுகவின் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்படவில்லை. திமுக ஆட்சி காலத்தில் தற்போதுதான் கொண்டு வரப்பட்டுள்ளது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை 75 பேருக்கு செய்துள்ளோம். அரசியலுக்காக விஜயபாஸ்கர் குழந்தையை பார்த்துவிட்டு பேசுகிறார். குழந்தை தொடர்பான அனைத்து தகவல்களும் பெற்றோர்களிடம் முழுமையாக தெரிவிக்கப்பட்டன. அவர்களும் கையெழுத்து இட்டிருக்கிறார்கள்.
விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, தருமபுரி அரசு மருத்துவமனையில் 11 குழந்தைகள் இறந்தனர். அதை அரசியல் ஆக்கவில்லை. கால்பந்து வீராங்கனை பிரியா அறுவை சிகிச்சையின்போது கவனக்குறைவாக சிகிச்சை செய்த மருத்துவர்கள் நிர்வாக ரீதியிலும், சட்ட ரீதியிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குழந்தை கை அகற்றப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்கள் முறையான அறிக்கை கொடுத்துள்ளனர். மேலும் நீதி வேண்டும் என்றால், நீதிமன்றம் செல்லாம். எந்த தனியார் மருத்துவரும் இந்த ஆய்வறிக்கையைப் பார்க்கலாம். குழந்தை கை அழுகியது 1ஆம் தேதிதான். குழந்தை குறைமாதத்தில் பிறந்துள்ளதால் அந்த குழந்தைக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளன" என்றார்.
இதையும் படிங்க: 'மக்களுக்கு நம்பிக்கை தருவதாக அரசு மருத்துவமனைகள் இருக்கணும்' - தமிழிசை அட்வைஸ்!