சென்னை ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பில் 100 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் வகையில் ரூ.2 கோடியே 14 லட்சம் செலவில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டது.
ஆக்சிஜன் உற்பத்தி மையம்
புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையத்தின் தொடக்க விழா இன்று (நவம்பர் 24) நடைபெற்றது. ஸ்டான்லி மருத்துவ கல்லூரி முதல்வர்(பொறுப்பு) ஜமீலா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆக்சிஜன் உற்பத்தி மையத்தின் பணிகளை தொடங்கி வைத்தனர்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியதாவது, கரோனா தொற்றின் உச்சத்தின் போது தன்னார்வலர்கள் மக்களுக்காக அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
அதனை தொடர்ந்து பல தனியார் நிறுவனங்கள் அரசுடன் கை கோர்த்தனர். அதன் ஒரு பகுதியாக கெபிடல் ஹோப் பவுண்டேசன் என்ற தனியார் நிறுவனம் சார்பில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.2 கோடியே 14 லட்சம் செலவில் ஆக்சிஜன் ஜெனரேட்டர் வழங்கப்பட்டது.
மேலும் 4 ஆண்டுகளுக்கு பராமரிப்பையும் அந்த தனியார் நிறுவனமே ஏற்று நடத்துகிறது. இதன் மூலம் 100 நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும்.
முதலில் சிகிச்சை
அரசு மருத்துவமனைகளில் பல இடங்களில் முதியவர்கள் தனியாக விட்டு செல்லப்படுகின்றனர். மருத்துவமனையில் அவர்கள் யார் என அடையாளம் காண்பதை விட அவர்களுக்கு தேவையான சிகிச்சையை முதலில் செய்யவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசி 76 விழுக்காடும், இரண்டாவது தவணை 40 விழுக்காடும் தாண்டி சென்று கொண்டிருக்கிறோம். கிராம புறங்களில் நேற்று (நவம்பர் 23) மட்டும் 3 லட்சத்து 40 ஆயிரம் தடுப்பூசிகள் வீடுகளுக்கே சென்று போடப்பட்டுள்ளன.
தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை
தமிழ்நாட்டில் எந்த தனியார் மருத்துவமனைகளிலும் பெரிய அளவிலான தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை. இதுவரை தமிழ்நாட்டில் டெங்குவால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 516 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: இன்று 5000... நாளை 50,000...! - பம்பரமாய் சுழலும் மா.சு.