சென்னை: அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் எலும்பு தானம் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு பேருந்தை மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். இதில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சென்னையின் அடையாளமாக உள்ள அடையார் புற்றுநோய் மருத்துவமனை எனது தொகுதியில் இருப்பது பெருமைக்குரியது. புற்றுநோய் சிகிச்சையில் தமிழ்நாட்டிற்கே அடையாளமாக இருக்கிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 98 இடங்களில் இந்த வாகனம் சென்று புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும். மாவட்ட ஆட்சியர்கள் இந்த வாகனம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான இடங்களை அளிப்பார்கள்.
காஞ்சிபுரத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம்
இந்த வாகனத்தில் புகையிலை போன்ற பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். எலும்பு தானம் குறித்தும் இந்த வாகனத்தின் மூலம் விளக்கப்படுகிறது. புற்றுநோய் குணப்படுத்தக்கூடிய நோய் தான் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அரசுடன் இணைந்து புற்று நோய்க்கு சிகிச்சை அளித்து வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையை பார்வையிட்டேன். தமிழ்நாடு அரசு புற்றுநோய் ஆராய்ச்சிக்கு என ஆராய்ச்சி நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் புற்றுநோய் மருத்துவமனையில் ஆராய்ச்சி மையம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் அரசும் இணைந்து புற்றுநோய் பாதித்தவர்களின் விவரங்களை பதிவு செய்துள்ளது. இதனால் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியும். அரசு தொடர்ந்து அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு தேவையான உதவிகளை வழங்கும்" என்றார்.
இதையும் படிங்க: அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்