சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு, தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி (Measles and Rubella vaccination) செலுத்தும் முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த டிசம்பர் 4ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததில் பல்வேறு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உட்பட 4 மாவட்டங்களில் குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னை மாநகராட்சி சார்பில், ஆழ்வார்பேட்டை, சி.பி.ராமசாமி சாலை, பீமனம்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில், 9 மாதக் குழந்தை முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் இன்று முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறும்.
மேலும், பள்ளிகளை பொறுத்தவரை நடமாடும் மருத்துவ குழு, வாகனங்களின் மூலம் தடுப்பூசிகள் போடும் பணி நடைபெறுகிறது. மேற்குறிப்பிட்ட 4 மாவட்டங்களை பொறுத்தவரை, 9 மாதக் குழந்தைகள் தொடங்கி 15 வயது வரையிலான இளம் சிறார்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 42 ஆயிரம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த குழந்தைகளுக்கு ஏற்கனவே 2 தவணை தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், மழைக்கால நோய்களில் இருந்து காக்கும் பொருட்டு, கூடுதல் தவணை தடுப்பூசிகள் போடப்படுகிறது.
இதற்காக ஒன்றிய அரசிடமிருந்து 10 லட்சம் தடுப்பூசிகள் கேட்கப்பட்டுள்ளது. தற்போது 2 லட்சத்து 90 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாதவாறு அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை எடுத்துள்ளது. மழை பாதிப்பிற்கு பிறகு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் மருத்துவத் துறை டிசம்பர் 6ஆம் தேதி 300 நடமாடும் மருத்துவ வாகனங்களை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளது.
மேலும், டிசம்பர் 12ஆம் தேதி வரை ஒரு வார காலமாக 6 ஆயிரத்து 421 முகாம்கள் நடத்தப்பட்டு, 4 லட்சத்து 69 ஆயிரத்து 86 பேர் பயனடைந்துள்ளனர். காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட 6 ஆயிரத்து 403 பேர் மற்றும் சளி இருமல் பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள், 71 ஆயிரத்து 561 பேருக்கு தேவையான சிகிச்சைகள் மருத்துவ அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழைக்காக, இதுவரை 7 வாரங்கள் முகாம் நடத்தப்பட்டுள்ளது. இந்த 7 வாரங்களில் மட்டும் 16ஆயிரத்து 516 முகாம்கள் நடத்தப்பட்டு, 7 லட்சத்து 83 ஆயிரத்து 443 பேர் பயனடைந்துள்ளனர். பருவமழையின் காலத்தில் 10 வாரங்கள் தொடர்ச்சியாக மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இதன்காரணமாக பருவ மழையினால் ஏற்படும் நோய் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், உயர் பட்ட படிப்பு (M.ch) மாணவர் ஒருவர் பணிச்சுமையின் காரணமாக இறந்தாரா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், இறந்த மருத்துவ மாணவர் பணியில் சேர்ந்து 6 நாட்கள் மட்டும் ஆன நிலையில், அவருக்கு 1 நாள் கூட பணி ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அந்த முதுநிலை மருத்துவ மாணவர் எப்படி பணிச்சுமையின் காரணமாக இறந்திருக்கக்கூடும் என்று கூறினார்.
மேலும், சமூக வலைத்தளங்களில் வருகின்ற செய்திகள் எல்லாம் எடுத்து பத்திரிக்கைகளில் போடுவது எல்லாம் நியாயமான ஒன்றாக இருக்காது. தூய்மைப் பணியாளர் ஒருவர், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை துடைத்து சுத்தம் செய்யும் பணியினை மேற்கொள்கிறார். ஆனால், அந்த தூய்மை பணியாளர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்கிறார் என்று தவறான செய்தியை சமூக வளைதளங்களில் வெளியிடுகின்றனர்.
அரசு மருத்துவமனைகள், 100 சதவீதம் மக்கள் வரிப்பணத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மருத்துவமனைகளாகும். இந்த மருத்துவ கட்டமைப்பு மற்றும் மருத்துவ சேவைகளை தரம் தாழ்த்தி செய்திகளை போட்டு மக்களிடம் கொண்டு சேர்த்தால் எந்த மக்கள் மருத்துவமனைகளுக்கு வருவார்கள். விமர்சனம் செய்யுங்கள், அந்த விமர்சனம் நியாயமான விமர்சனமாக இருக்க வேண்டும். விமர்சிப்பதற்கு முன்பு அதன் நம்பகத்தன்மை விசாரித்து செய்யுங்கள்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மத்திய பிரதேச முதல்வராக பதவியேற்றார் மோகன் யாதவ்.. சத்தீஸ்கர் முதல்வரும் இன்று பதவி ஏற்பு!