சென்னை தி நகரில் உள்ள தனியார் விடுதியில் ஒன்றிய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகனுக்கு சென்னை மக்கள் மன்றம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த நபர்களும் கலந்துகொண்டு ஒன்றிய இணையமைச்சர் முருகனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, ”மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, ஏழை குடும்பத்தில் வளர்ந்து, இன்று இணை அமைச்சராக உள்ள முருகனை பார்க்கும் போது சரியான கட்சியில்தான் இருக்கிறேன், சரியான கட்சியில் தலைவராக இருக்கிறேன், சரியான கட்சி இந்தியாவின் தலைமை பண்பில் உள்ளது என்பது தெரிகிறது.
75 ஆண்டுகாலம் அருந்ததியர் சமூதாயத்தில் இருந்து ஒரு கட்சியிலும் ஒரு அமைச்சர் வரவில்லை. 12 அமைச்சர்கள் எஸ்.சி சமுதாயத்திலும், 8 அமைச்சர்கள் எஸ்.டி சமுதாயத்திலும், 28 அமைச்சர்கள் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களில் இருந்தும், 11 புதிய அமைச்சர்கள் பெண்களாக உள்ள கட்சி பாஜக.
தமிழ்நாட்டில் அதிகம் பேசப்படும் வார்த்தை சமூகநீதி. பதில் தெரியவில்லையென்றால் திராவிட கட்சிகள் சமூகநீதியை பற்றி பேசுவார்கள்.
சமூக நீதியில் பாஜக முருகனுக்கு செய்தை வேறு எந்த திராவிட கட்சிகளும் செய்து இருக்காது’ என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், ”தமிழ்நாட்டில் உண்மையான சிங்கம் பாஜக தலைவர் அண்ணாமலை. சமூக நீதி காவலனாக மோடி இருக்கிறார்.பொருளாதாரத்தில் பிந்தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து அனைத்து சமுதாயத்தினருக்கும் இட ஒதுக்கீடு கொடுத்தவர் மோடி.
2014ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு மீனவர் மீதும் துப்பாக்கி சூடு நடைபெறாமல் தடுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிபடி மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைத்தவர் மோடி.
நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் திட்டத்தை பிரதமர் செயல்படுத்தியுள்ளார். மீனவர்கள் நலனுக்காக மீன்வளத்துறை ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது” என்றார்.