சென்னை: அடையாறில் சமுதாய நலக்கூடத்தில், 24 மணிநேரமும் செயல்படக்கூடிய கரோனா தடுப்பூசி மையத்தைத் திறந்துவைத்து, பின்னர் கர்ப்பிணிகளுக்கு இரண்டு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஊட்டச்சத்துப் பொருள்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்.
பின்பு செய்தியாளரைச் சந்தித்த அவர், "பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் திமுக அரசு தரம் உயர்த்தியுள்ளதால் வார்டு வரையறை உள்ளிட்ட பணிகள் செய்ய வேண்டி இருக்கின்றன. அந்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி உள்ளது.
இதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் கேட்டிருக்கிறோம். நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்து தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் மாதத்திற்குள் நடத்த நடவடிக்கை எடுத்துவருகிறோம். முதலமைச்சர் உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்தி முடிக்க அறிவுறுத்தியுள்ளார். ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டுவருகிறது.
மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளர்கள் எடுக்கப்படும்போதே ஒப்பந்த அடிப்படையில்தான் எடுக்கப்படுக்கிறார்கள். எனினும் அரசின் நிதி நிலைமையைக் கணக்கில்கொண்டு அவர்களுக்குத் தேவையானதைச் செய்ய தமிழ்நாடு முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
நிகழ்வில் அமைச்சருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மாநகராட்சி சுகாதாரத் துனை ஆணையர் மனீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வேலுமணியின் வங்கி லாக்கர் சோதனை