திருச்சி: அதிமுக ஆட்சியில் அமைச்சர்களோடு அமெரிக்கா சென்ற எடப்பாடி பழனிசாமி, எதையும் செயல்படுத்தவில்லை என அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டியுள்ளார். திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாநகராட்சி மாதிரி உயர்நிலைப்பள்ளிக்கான கட்டுமானப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு இன்று (மே 25) பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 'மாநகராட்சி பள்ளி 9 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் ஆயிரம் குழந்தைகள் படிக்கும் அளவிற்கு 'டெல்லி மாடல் பள்ளி' போன்று கட்டப்பட உள்ளது. இதற்காக இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வரும் ஜனவரி அல்லது நவம்பர் மாதத்திற்குள் திறக்கப்பட உள்ளது. அரிஸ்டோ மேம்பாலம் 29ஆம் தேதி காலை திறக்கப்பட உள்ளது.
பாதாள சாக்கடை பொருத்தவரை, இதற்கு முந்தைய ஆட்சியில் காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆள்பற்றாக்குறை என காரணம் கூறியிருப்பதாகவும் ஆகவே, புது காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டால் விலை கூடுதலாக ஆகிவிடும் என்பதனால், வேலையும் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. எனவே, அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைவில் பாதாள சாக்கடை பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த வருடம் காவிரி புது பாலம் பணி ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
ரூ.600 கோடி செலவில் ஐடி பார்க்: எடப்பாடி பழனிசாமி அமெரிக்காவிற்கு அவரது ஆட்சியில், அமைச்சர்களை அழைத்து சென்றார். ஆனால், எந்த ஒப்பந்தங்களையும் செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் 500 பேருந்துகள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கார் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம், காவல் நிலையம், வியாபாரிகளுக்கு கடைகள் மற்றும் இதன் அருகே ரூ.600 கோடி செலவில் ஐடி பார்க் அமைய உள்ளது.
தமிழக முதலமைச்சர் வெளிநாட்டில் தொழில் துறையோடு ஒப்பந்தம் போடப்பட்டு இரண்டு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முதலீடு எடுக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று சிங்கப்பூரில் 6 ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஜப்பானில் தொழில் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர், எதிர்க்கட்சியினர் எப்போது குறைதான் கூறுவார்கள் என்றும், என்ன பணி செய்தாலும் அவர்கள் திட்டத்தான் செய்வார்கள் என்றும் சாடினார்.
இதனிடையே, மக்களுக்கு நல்லது செய்வதற்கே உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளதாக கூறிய அவர், முதலில் குறை கூறுபவர்கள் தங்களின் முதுகை திரும்பிப் பார்க்க வேண்டும் என்று சாடினார். மேலும், குறை கூறுபவர்கள் அவர்களது அட்சியில் என்ன செய்தார்கள் என நினைத்து பார்க்க வேண்டும் என்றார். டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவின் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக கூறினார்.
ஈபிஎஸ் அறிக்கை: இதனிடையே, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது அங்கு முதலீடு செய்யவா? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது முதலீடு செய்யவா? என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் வாயில் வடை சுடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதற்கு முன் வெளிநாடு பயணம் மேற்கொண்டு எந்த முதலீட்டை ஈர்த்தார் என்று கேள்வியுழுப்பியுள்ளார்.
மேலும் அவர், புதிய திட்டங்களையும் தொடங்காமல், "கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்' செய்வதிலேயே முதலமைச்சரின் மொத்தக் குடும்பமும் மும்முரமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்றும்; விடியா அரசின் அமைச்சர் P.T.R. பழனிவேல் தியாகராஜன், 'குறுகிய காலத்தில், முதலமைச்சரின் மகனும், மருமகனும் அடித்த ரூ.30,000 கோடியை எங்கு பதுக்குவது என்று தெரியாமல் தவிப்பதாக' ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது, இந்த ஆட்சியின் ஊழலை பறை சாற்றுகிறது எனவும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி: இவரின் இந்த பகிரங்க குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நான்காண்டு கால ஆட்சியில் “ஊரெங்கும் ஊழல்” என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரராக கரன்சி மழையில் நனைந்து ஊழலின் ஒட்டுமொத்த உருவமாகத் திகழ்ந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள், வெளிப்படைத்தன்மையோடு நடைபெறும் திமுக ஆட்சி மீது ஊழல் புகார் கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வியை இன்று தமிழ்நாடே கேட்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்க்கட்சித் தலைவருக்கும் தனது கடும் கண்டனத்தை பதிலடியாக தந்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இளம்பெண்கள் கதறியபோது வாயை மூடிக்கொண்டு இருந்தவர் என்றும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி வழியில் போராடியவர்கள் மீது காக்கை குருவிகளை சுடுவதுபோல 13 பேரை சுட்டுவிட்டு, அதனை டிவியில் தான் பார்த்து தெரிந்துகொண்டதாக பொய் கூறியவர் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
ஈபிஎஸ்-உடன் மிதுன் வெளிநாடு பயணம்: “முதலீடு” என்றால் தனக்குக் கிடைக்கும் ஊழல் பணம் மட்டுமே என அகராதியில் புதிய அர்த்தம் கண்டுபிடித்த பழனிசாமி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை பெறப் போகும் முதலமைச்சர் மீது அவதூறு பேசுகிறார். அந்த அளவிற்கு அவருக்கு பொறாமையும் எரிச்சலும் மனதிற்குள் கோடை வெயிலை விட அனலாக கக்குகிறது. 13 நாள் பயணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எடப்பாடி பழனிசாமி செல்வதற்கு முன்பு அவரது மகன் மிதுன் அங்கு போனது பழனிசாமியின் ஊழல் பணத்தை முதலீடு செய்வதற்குத்தானோ? என்ற கேள்வி இப்போது எழுகிறது.
குறிப்பாக, “முதலீடு” என்றால் தனக்குக் கிடைக்கும் 'ஊழல் பணம்' மட்டுமே என அகராதியில் புதிய அர்த்தம் கண்டுபிடித்த பழனிசாமி, 13 நாள் பயணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு தான் செல்வதற்கு முன்பு அவரது மகன் மிதுனை அங்கு அனுப்பியது ஊழல் பணத்தை அங்கு முதலீடு செய்வதற்குத்தானோ என்னவோ என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: சிங்கப்பூர் உள்துறை அமைச்சருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு.. மதுரை மக்களுக்காக வைத்த கோரிக்கை!