சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்திய வானிலை ஆய்வு மையம், நவம்பர் 18 வெளியிட்ட அறிவிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதன் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்றும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என்றும், பின்னர் இது அடுத்த மூன்று நாட்களுக்குள் மேற்கு வடமேற்கு திசையில் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நவம்பர் 19ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நவம்பர் 20ஆம் தேதி சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். நவம்பர் 21ஆம் தேதி சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
மேலும், நவம்பர் 22ஆம் தேதி சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராபள்ளி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என தெரிவித்திருந்தது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதைத் தொடர்ந்து கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள காரணத்தால், கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் அவர்களது கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கு 17 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதர மாவட்டங்களுக்கு மொத்தம் 43 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மிக கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர். 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்டங்களில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மழை காலத்தில் திமுகவின் செயல்பாடுகள் வரவேற்கும் வகையில் உள்ளது - விஜய பிரபாகரன்