சென்னை: விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராகவும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளார். இவர் திமுகவின் மூத்த அமைச்சர்களில் ஒருவராக இருப்பவர் மேலும் இவரது மகன் ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனின் மகன் ரமேஷ் மற்றும் பேரன் ஆகியோர் குடும்பத்துடன் படம் பார்க்கச் சென்றுள்ளனர். படம் ஓடிக்கொண்டிருக்கும் போது ரமேஷ் இருக்கைக்குப் பின்புறம் அமர்ந்திருந்த 3 பெண்கள் உள்பட மர்ம நபர்கள் 6 பேர் அதிக சத்தம் எழுப்பி விசிலடித்துக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் இருந்துள்ளனர்.
இதன் காரணமாக மற்றவர்களுக்குப் படம் பார்ப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது அதனால் அமைச்சரின் மகன் ரமேஷ் மற்றும் பேரன் தட்டி கேட்டபோது வாய் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக அமைச்சரின் குடும்பத்தினருக்கும் அவர்களுக்கும் இடையே பிரச்சினை உண்டாகிக் கைகலப்பாக மாறியுள்ளது.
இதில் அமைச்சரின் மகன் ரமேஷ் மற்றும் பேரனைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனின் மகன் மற்றும் பேரனைத் தாக்கியபோது அவர்களின் அலறல் சத்தம் கேட்டு திரையரங்க நிர்வாகத்தினர் இரு தரப்பையும் சமாதானம் செய்துள்ளனர் அப்போது தாக்கிய நபர்கள் அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் காயமடைந்த அமைச்சரின் மகன் மற்றும் பேரன் ஆகியோர், கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ரமேஷ் தரப்பில், இது தொடர்பாக அந்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில், போலீசார்கள் அந்த மர்ம நபர்களைத் தேடும் பணியில் ஈட்டுப்பட்டுள்ளனர். மேலும் இது திட்டமிட்ட தாக்குதலா? இல்லை, வேறு ஏது காரணம் உள்ளதா? அல்லது முன்விரோதம், அரசியல் பிரச்சனையா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல திரையரங்கில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனின் மகன் மற்றும் பேரனைக் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் வீடுகளை நோட்டமிடும் மர்ம நபர்கள்: சிசிடிவி காட்சி வெளியீடு..!