கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவிற்கு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இரங்கல் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், “கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் மருத்துவர்கள், உள்ளாட்சித் துறை பணியாளர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரின் பணி மகத்தானது. அதேசமயம் அரசின் விழிப்புணர்வு நடவடிக்கைகளை பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்கு ஓய்வின்றி உழைக்கும் பத்திரிகையாளர்களின் பணியும் போற்றத்தக்கது.
முதலமைச்சர் உத்தரவின் பேரில், களப்பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மாவட்டப் பத்திரிகையாளர்களும் செய்தி சேகரிக்க ஏதுவாக கோவிட்-19 நிவாரணத் தொகையாக மூன்றாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கரோனா செய்தி சேகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.
மேலும் எனது துறை சார்பாக அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த இக்கட்டான சூழலில் பணியாற்றும் அனைத்துப் பத்திரிகையாளர்களும் பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசங்களைக் கட்டாயமாக அணிந்து மிகுந்த பாதுகாப்புடன் களப்பணியில் ஈடுபட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த நிதியிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை வேல்முருகனின் குடும்பத்திற்கு வழங்கியுள்ளார்.