சென்னை திருவேற்காடு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவருக்கு முகம், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, அருகே இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு அழைத்துள்ளனர். இருப்பினும் ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானது. அப்போது அவ்வழியாக வந்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் விபத்தில் சிக்கியவரைக் கண்டு தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
பின்னர், காரில் இருந்து இறங்கி வந்த அமைச்சர் 108 ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்தார். மூன்று முறை அவர் அழைத்தும் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் அழைப்பு ஏற்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமாருக்கு ஃபோன் செய்து நடந்ததை கூறியுள்ளார். பின்னர், ஆம்புலன்ஸ் வந்த பிறகு இளைஞர் அதில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.