தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை அவரது கட்சி தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அறிவுசார் பூங்கா மற்றும் அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்து பார்வையிட்டார். இந்த விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களுக்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள இருவரின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் நினைவிடத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயப்பிரதீப் சார்பாக எழை எளிய மக்களுக்கு அன்னதானம், அரிசி, இலவச புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, “ஜெயலலிதாவின் நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுவது குறித்து துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும், நினைவிட பணிகள் நிறைவு செய்த பின்னர் ஏன் மக்களுக்கு அனுமதிக்கவில்லை, சசிகலா மீது அதிமுக அரசுக்கு பயம் உள்ளதா என்ற கேள்விகளுக்கு அவர் கூறியதாவது, “நாங்கள் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. சசிகலாவின் அழைப்பு அமமுக தொண்டர்களுக்குத் தான், அதிமுகவிற்குப் பொருந்தாது.
சரத்குமார் எங்கள் கூட்டணியில் தான் இருக்கிறார். மரியாதை நிமித்தமாக சசிகலாவை சந்தித்திருப்பார். சசிகலாவின் நடவடிக்கைகளால் இரட்டை இலைக்கு சின்னத்திற்கு எந்த சிக்கலும் இல்லை. இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கே சொந்தம்" என்றார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்:சசிகலா