சென்னை, ராயபுரம் கிழக்கு மாதா கோயில் தெருவில் புதிதாக வாங்கப்பட்ட கழிவு நீர் அகற்றும் வாகனம் மூலமாக கழிவு நீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளை அகற்றும் பணிகளை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் இன்று (ஆக24) ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதிதாக வாங்கப்பட்ட வாகனத்தில் கால்வாயில் அடைப்புகளை நீக்கும் மூன்று பயன்பாடுகளும் உள்ளன. மழைக் காலங்களில் கால்வாய் அடைப்பு இல்லாமல் இருந்தால் சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்கும். சென்னையில் 2,236 கிலோ மீட்டர் தொலைவிற்கு மழைநீர் கால்வாய் உள்ளது. ராயபுரம் மண்டலத்தில் 138 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் கால்வாய் உள்ளது.
சக்ஷன், ஜெட்ராடிங், ரிசைக்கிளிங் போன்ற மூன்று பணிகளை ஒரே வாகனத்தை வைத்து செய்யும் வசதிக்காக இந்த வாகனம் ஐந்து கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கு இதுபோல் ஏழு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரத்தின் பயன்பாட்டால் மனிதர்கள் கால்வாயில் இறங்கி பணியாற்றும் நிலை இனி இருக்காது.
காலத்தின் தேவைக்கேற்ப இரண்டாவது தலைநகரம் குறித்து முடிவெடுக்கப்படும். கரோனா பரிசோதனை, சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள், இறப்பு விகிதம் என உலக அளவில் ஒப்பிடும்போது தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. எனவே உயிரிழப்பு விகிதத்தை மறைக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. முகக் கவசங்கள், கை கழுவுதல் போன்ற அரசு வழிமுறைகளைப் பின்பற்றினால் கரோனா பரவலைத் தடுக்கலாம்.
இந்தியாவின் கட்டமைப்பில்தான் தமிழ்நாடு உள்ளது. வேலைவாய்ப்பை பொறுத்தவரை கொள்கைப்படியே செயல்பட்டு வருகிறோம். சென்னை திரும்புவர்கள், மருத்துவத் துறை கூறும் வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கரோனா பரவலில் சங்கிலித் தொடர் இல்லாத நிலை தமிழ்நாட்டில் இருப்பதால் சூழ்நிலைக்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கரோனா ஊரடங்குத் தளர்வுகளை தான்தோன்றித்தனமாக செய்ய முடியாது. வல்லுநர்களின் அறிவுரைக்கேற்ப அரசு நடவடிக்கை எடுக்கும். பட்டியலின மக்களுக்கு அரசு பல நல்ல திட்டங்களை செய்து வருகிறது. மேலும் அவர்கள் பாதுகாப்புடன் வாழ அரசு வழிவகை செய்து வருகிறது. பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மீனவர்கள் மாயமான விவகாரத்தில் மீனவர்களின் குடும்பத்தாருக்கு அரசின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. காணாமல் போன மீனவர்களை மீட்க அரசு தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது” என்றார்.
இதையும் படிங்க:"கரோனாவைவிட கொடூர அரசு தமிழ்நாட்டில் இருக்கிறது" - மு.க. ஸ்டாலின் சாடல்