சென்னை திருவல்லிக்கேணி அன்னை சத்தியவாணி நகரில் உள்ள பள்ளியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அப்பகுதி பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக் கவசம், மாத்திரைகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "ராயபுரம் மண்டலத்தை பொறுத்தவரை 8 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மக்கள் நெருக்கமாக உள்ள அந்த பகுதியில் கரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் சவாலான பணி. முதலமைச்சரின் உத்தரவின்படி இங்கு நுண்ணுயிர் செயல் திட்டத்தின் மூலம் காய்ச்சல் மையம் நடைபெற்று வருகிறது.
ராயபுரம் மண்டலத்தில் கரோனாவால் 6 ஆயிரத்து 814 பேர் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 174ஆக உள்ளது. 2 ஆயிரத்து 469 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
முகக் கவசம் நம்முடைய உயிர்கவசம் என்பதை அறிந்து மக்கள் அணிய வேண்டும். அரசு தன்னுடைய கடமையை செய்து வருகிறது. எனவே, மக்களும் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வரவேண்டும். மக்கள் ஒத்துழைத்தால் கரோனாவை விரட்டி அடிக்கலாம்.
கரோனா வைரஸின் தாக்கம் அதிகம் உள்ள பகுதியில் தினம்தோறும் 15 மருத்துவக் குழு, நடமாடும் பரிசோதனை முகாம்கள் மூலம் இதுவரை 3 ஆயிரத்து 773 இலவச மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு 56 ஆயிரத்து 595 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது" என்றார்.