சென்னை ராயபுரம் மண்டலத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டு மையத்தை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சரின் நடவடிக்கையால் உயர் அலுவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, சென்னையில் தற்போது கரோனா தொற்று பரவல் வேகமாக குறைந்துள்ளது. அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.
வன்முறை மற்றும் ஊழல்வாதிகள் நிறைந்த இடம் இவை இரண்டுமே திமுகவின் அடையாளம். நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து போன்ற அனைத்தும் திமுக காலத்தில் நிகழ்த்தப்பட்டன. கடந்த காலத்தில் பிரியாணி கடை, டீ கடை, அழகு நிலையம், தள்ளுவண்டி கடைகளில் அராஜகம் செய்தது போதாதென்று, உச்சகட்டமாக துப்பாக்கி கலாசாரத்தை திமுக செய்துவருகிறது.
அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்துக்கொண்டு ஜனநாயகத்தை மீறி செயல்படுவது சட்டவிரோதமானது. திமுக ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவு என்றால் தப்பித்தவறி ஆட்சிக்கு வந்துவிட்டால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு எம்எல்ஏ-விடமும் துப்பாக்கி இருக்கும். ஒவ்வொரு எம்எல்ஏ-வும் வீடுபுகுந்து அடிப்பார்கள். திமுக எம்எல்ஏ அனைவரிடமும் கள்ளத்துப்பாக்கி இருக்கும் என்று, அவர்களைக் கண்டு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: திருப்போரூர் துப்பாக்கிச் சூடு: திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது