சென்னை : இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் - கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் கோயம்புத்தூர் மற்றும் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைந்து நடத்தும், 52ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான கரும்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பயிலரங்கினை தமிழ்நாட்டின் வேளாண்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் சென்னை ஆழ்வார்பேட்டையில் தொடங்கி வைத்தார்.
அமைச்சர் உபப்பொருட்களைக்கொண்டு இணைமின் உற்பத்தி, எத்தனால் உற்பத்தி ஏற்படுத்தி ஆலையை லாபகரமாக இயக்க வேண்டும் எனக்குறிப்பிட்டு பயிலரங்கிற்கு வருகை புரிந்த கரும்பு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். மேலும் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையால் அமைக்கப்பட்ட கரும்பு ரகங்கள், இயந்திரங்கள் மற்றும் நுண்ணுயிர் பாசன அமைப்புகள், திசு வளர்ப்பு நாற்றுகள், உயிர் உரங்கள் உள்ளடக்கிய கண்காட்சியினை வேளாண்மை - வேளாண்துறை அமைச்சர் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
பின் அவர் பயிலரங்க ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு, அதிக சராசரி மகசூல் பெற்ற விவசாயிகள் மற்றும் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று பேசும்போது, “ஒன்பது ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்த மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 2010-2011ஆம் ஆண்டு அரவை பருவத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்குப் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கரும்பு விவசாயிகளுக்கு பொங்கல் பரிசாக சிறப்பு ஊக்கத் தொகை வழங்கி சிறப்பித்துள்ளது” எனத் தெரிவித்தார்.
இவ்விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் சர்க்கரைத் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் கரும்பு ஆராய்ச்சி வல்லுநர்கள், கரும்பு பெருக்கு அலுவலர்கள், கரும்பு அலுவலர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : வேளாண்பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளை இந்த அரசு அனுமதிக்காது - முதலமைச்சர்