சென்னை: மேகதாது குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக, ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து பேசுவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றார். அங்கு அவரை சந்தித்து பேசிய அவர், இன்று சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட நினைப்பது சட்டத்திற்கு புறம்பானது. உச்ச நீதிமன்றத்திற்கு எதிரானது.
கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பாக விரிவான அறிக்கையை தயாரிக்க அனுமதி அளித்தது நியாயம்தானா? என கேள்வி எழுப்பினேன். ஒன்றிய அமைச்சர் இந்த விவகாரம் தொடர்பாக நன்கு அறிந்துள்ளார் என்பதை இந்த சந்திப்பில் புரிந்துகொள்ள முடிந்தது. விரிவான அறிக்கையை தயாரிப்பதால் மட்டுமே அணை கட்டிவிட முடியாது. அதை ஒன்றிய அரசும் அனுமதிக்காது.
காவிரி மேலாண்மை ஆணையம்
கர்நாடக முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான கடிதம் எழுதியுள்ளார். அதற்கும் கர்நாடக முதலமைச்சர் கருத்து தெரிவித்திருப்பது வருத்தமளிக்கிறது. மார்க்கண்டேய அணை விவகாரத்தில் நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என உச்ச நீதிமன்றமும், சமரச குழுவும் தெரிவித்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளாக நடுவர் மன்றம் அமைக்கபடாமல் உள்ளது.
காவிரி ஆற்றில் இருந்து முறையாக தண்ணீர் கிடைப்பதில்லை. இது குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடலாம் என்றாலும், மூன்று வருடங்களாக ஆணையரை நியமிக்காமல் உள்ளனர். இதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளேன். விரைவில் ஆணையர் நியமனம் செய்யப்படுவார் என ஒன்றிய அமைச்சர் உறுதி அளித்தார்” என பேசி முடித்தார்.
எல். முருகன் ஒன்றிய அமைச்சரானது மகிழ்ச்சி!
பாஜக தலைவர் எல். முருகனுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கொடுத்திருப்பது தொடர்பாக பதிலளித்த அவர், “தமிழ்நாட்டில் இருந்து யாராவது ஒருவர் ஒன்றிய அமைச்சர் ஆவது மகிழ்ச்சிதான் என்றார்.
முல்லை பெரியாறு துணை அணை கட்டுவது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளதாகவும், காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக தெரிவித்த அவர், இந்த சந்திப்பு மொத்தத்தில் மகிழ்ச்சியான சந்திப்பாக இருந்தது என்று முடித்தார்.
இதையும் படிங்க: ஒன்றிய அமைச்சராக பதவியேற்றார் எல். முருகன்!