சட்டப்பேரவையில் இன்று செய்தித்துறை, கைத்தறி, துணிநூல் துறை, வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
பேரவையில் பேசிய ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன், மயிலம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவகுமார் ஆகியோர், பள்ளிகள் தரத்தை உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்
இதற்குப் பதிலளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, " உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு அரசு பல்வேறு நெறிமுறைகளை விதித்துள்ளது.
அதனடிப்படையில், ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயில வேண்டும், ஒரு மேல்நிலைப் பள்ளியிலிருந்து மற்றொரு மேல்நிலைப்பள்ளிக்கு 8 கி.மீ., இடைவெளி இருக்க வேண்டும். ஒரு பள்ளியை விரிவுபடுத்த கட்டட தொகையாக 2 லட்சம் இருக்க வேண்டும்.
இந்த நெறிமுறைகளைப் பள்ளி நிர்வாகம் பின்பற்றும் பட்சத்தில் பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் பெண்கள், மலைவாழ் மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 12 தொடக்கப்பள்ளிகள், 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது" என்றார்.