சென்னை: பள்ளிக்கல்வித்துறை கீழ் இயங்கி வரும் மாநில பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இன்று (நவ.30) நடைபெற்றது. மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரும், பள்ளி கல்வி அமைச்சருமான அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு புதிதாக 14 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட துணைத் தலைவர்கள் மற்றும் நியமன உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் அதனைத்தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறையின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய தீர்மானமாக பள்ளிக்கல்வித்துறையில் வழக்குகளை கையாளுவதற்கு பல கட்டங்களில் நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதற்கென ஒரு சட்ட அலுவலர் மட்டுமே உள்ளதால் போதுமான எண்ணிக்கையில் அலுவலர்கள் தேவைப்படுகிறது. எனவே சட்ட அலுவலருக்கு உதவியாக சட்ட வரைவு நுட்பம் தெரிந்த நான்கு நபர்களை பணியமர்த்தி தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து நியமிக்கப்படுகின்றவருக்கு வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கூட்டப்படுகிறது.
ஒரு பள்ளியின் உடைய வளர்ச்சிக்கு பெற்றோர், ஆசிரியர் கழகத்தினுடைய பங்கீடு முக்கியமானது. 10, 11, 12 வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக வினா வங்கிகள் ஏற்கனவே பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. அந்த புத்தகங்கள் கரோனா தொற்றுக்கு பின்னர் தயார் செய்யப்பட்டு வழங்கப்படவில்லை.
பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் மீண்டும் வரும் ஜனவரியில் இருந்து, மாணவர்களுக்கான வினா-விடை புத்தகங்கள் வெளியிடப்படும். மேலும், பள்ளிக்கல்வித்துறைக்கு ஒரு ஆண்டிற்கு ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
பள்ளிகளை மேம்படுத்துவதற்காக 113 தொகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்துள்ளேன். அரசு அறிவிக்கும், செயல்படுத்தும் திட்டங்கள் பள்ளிகளில் செயல்படுவதை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் உறுதி செய்ய வேண்டும்” என பேசினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன், பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் தொடர் குழப்பம்..! பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளரின் பதில் என்ன..?