சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த கரசங்கால் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்த சிஷ்டிகா என்ற மாணவி, இன்று வழக்கம்போல் தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த மினி வேன், எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், மாணவி சிஷ்டிகா படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் மாணவியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை அளிக்கும் பிரிவு இல்லாததால், சிஷ்டிகாவை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிஷ்டிகாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
விபத்து நடந்த சாலை, படப்பை, வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரம் செல்லும் மிக முக்கியமான சாலை. இந்த சாலையில் முறையான சிக்னல்கள், எச்சரிக்கை பலகைகள் என எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளோ, போக்குவரத்து காவல்துறையினரோ இல்லை எனவும், வாலாஜாபாத்தில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பணியாளர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி வைப்பதால், இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மாணவி சிஷ்டிகா உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக விபத்தை ஏற்படுத்திய மினி வேன் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதையும் படிங்க: சென்னை சத்யபாமா கல்லூரியில் கோஷ்டி மோதல் வீடியோ!