சென்னை: ஜே.ஜே நகர் முதல் பிராட்வே வரை செல்லும் 7h பேருந்து நேற்று புரசைவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மேற்கூரை மீது ஏறி தொங்கியபடி ரகளையில் ஈடுபட்டு வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர் கீழ்பாக்கம் கார்டன் சாலை பெரிய தெரு அருகே பேருந்தை நிறுத்தினார்.
அப்போது அங்கிருந்த டிபி சத்திரம் நுண்ணறிவு பிரிவு தலைமைக் காவலரான நிகோலஸ் மாணவர்களை எச்சரித்து உள்ளே அனுப்பினார். மேலும் மாணவர் ஒருவரை பிடித்து விசாரணை செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளார். இதனை பார்த்த ஒருவர் எப்படி மாணவனைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வாய் என கூறி காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தகராறில் ஈடுபட்டு காவலரை தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. அவரை பிடித்து விசாரணை நடத்திய போது, செனாய் நகரை சேர்ந்த ஆனந்த்(33) என்பதும், பால் வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது.

இதனையடுத்து ஆனந்த் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், பொது ஊழியரை கடமையை செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் டிபி சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த மகள் - காதலனின் தந்தையை கொன்ற தந்தை