தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த பென்னிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரும் சிறைக்கைதியாக அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் வணிகர் சங்க பேரமைப்பு நாளை முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள காணொலியில், “சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நாளை தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு நடத்தும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு தார்மீக அடிப்படையில் ஆதரவு தெரிவிக்கும் அதே நேரத்தில், பால் முகவர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஏனெனில், கரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் இச்சூழலில் பொதுமக்கள், வணிகர்கள், பால் முகவர்கள், பல்துறை சார்ந்த தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவரும் நிலையில், முழு கடையடைப்பு போராட்டம் என்பது கூடுதல் சிரமத்தை தரும்.
எனவே பொதுமக்களுக்கு பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையிலும், காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டிக்கும் வகையிலும், தமிழ்நாடு முழுவதும் பால் முகவர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து பால் விநியோகம் செய்வார்கள்.
காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்த வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது ஆத்மா சாந்தியடைய நாளை (ஜூன் 26) மாலை பால் முகவர்கள் தங்களின் கடைகளின் முன் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க:சாத்தான்குளத்தில் உயிரிழந்த வியாபாரி குடும்பத்திற்கு ஒரு கோடி வழங்க வேண்டும் - வணிகர் சங்கத்தினர்