சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், நாராயணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை, ராணுவ அதிகாரிகள் இன்று (டிச.06) ஹெலிகாப்டர் மூலம் வழங்கி வருகின்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் எதிரொலியாக பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்து பாதிப்புக்குள்ளாகியது. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியும், நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இதில் அதிக பாதிப்புடைய பகுதிகளாக வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, நாராயணபுரம், கோவிலம்பாக்கம், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், நாராயணபுரம் பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலமாக மக்களுக்கு உணவு விநியோகம் தொடங்கியிருக்கிறது.
கனமழை காரணமாக பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், நாராயணபுரம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏரிகளில் இருந்து வெளியேறிய உபரிநீர் காரணமாக, குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இதனால் பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் படகு மூலமாகச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி வருகின்றனர். சென்னையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் செல்போன் தொலைத்தொடர்பு முற்றிலும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக ஒரு சிலரை தொடர்பு கொள்ள முடியாமல் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டும் வருகிறது.
சென்னையில் ஒரு சில இடங்களில் மழை நீர் வடிந்து, இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், நாராயணபுரம், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தண்ணீர் தேங்கி இருப்பதால், அப்பகுதி மக்கள் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து சுமார் இரண்டு ஹெலிகாப்டரின் மூலமாக ராணுவ அதிகாரிகள் வேளச்சேரி, பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று உணவுகள், பால் பாக்கெட் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயலால் மேலும் 6 பேர் உயிரிழப்பு; மூன்றாவது நாளாக தொடரும் மீட்புப் பணி!