கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பல சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், பெரும் பொருளாதார நெருக்கடியை அரசு சந்தித்து வருகிறது. குறிப்பாக, தினக் கூலிக்காக வேலை செய்பவர்கள் அதிகமாக பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதை சரிசெய்வதற்கு தமிழ்நாடு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளிமாநில தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களிடமும் ஒரு மாத வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது. தொழிலாளர்களிடமும், மாணவர்களிடமும் வீட்டு வாடகை கேட்டு உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. அப்படி செய்தால், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டை காலி செய்யவும் வற்புறுத்தக் கூடாது" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், வெளிமாநில தொழிலாளர்கள் தங்குவதற்கு சரியான இடம் அல்லது உணவு இல்லையென்றால் அரசு அலுவலர்கள் தற்காலிக இருப்பிடமும், அத்தியவாசியத் தேவைகள் கிடைக்க உறுதிசெய்யவேண்டும். அவர்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களும் சம்பளத்தில் பிடித்தம் எடுக்காமல் முழு சம்பளத்தையும் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: 7 கோடி மக்களைக் காப்பாற்றுமளவிற்கு தமிழ்நாடு அரசிடம் நிதியுள்ளதா?