சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வின் முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது, எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தனி நீதிபதியின் தீர்ப்பில் பல்வேறு தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டினர்.
அதில், 'குறிப்பாக, ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு ஜூலை 1ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என்றும் தனி நீதிபதி கூறியுள்ளது தவறு. கட்சியினர் ஒற்றைத் தலைமை வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாக கூறியதற்கு எந்தப் புள்ளி விவரங்களும் இல்லை எனவும், ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2ஆயிரத்து 500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா? என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது.
ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படாத நிலையில், அந்த நிவாரணத்தை தனி நீதிபதி வழங்கியது அசாதாரணமானது. கட்சி விவகாரங்களைப் பொறுத்தவரை பொதுக்குழுவின் முடிவே இறுதியானது. அடிப்படை தொண்டர்களின் கருத்துகளைப் பெறவில்லை என்ற தனி நீதிபதி தீர்ப்பளித்தது தவறு.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட வேண்டும், இருவரும் இணைந்து செயல்பட முன்வர மாட்டார்கள். தனி நீதிபதி உத்தரவு காரணமாக கட்சி நடவடிக்கைகள் ஸ்தம்பித்துவிட்டது. தனது உரிமை பாதிக்கப்பட்டதால் தான் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்திருக்கிறாரே தவிர, 1.50 கோடி உறுப்பினர்களின் உரிமைக்காக அல்ல.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்தக் கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவு கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையிலும், வழக்கு கோரிக்கையை மீறி தீர்ப்பு உள்ளதாலும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என வாதிட்டனர்.
தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், 'அடிப்படை உறுப்பினர்களைவிட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுக தான். இது சம்பந்தமான விதியைக்கொண்டு வருவதில் எம்ஜிஆர் உறுதியாக இருந்தார்.
ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் இரு பதவிகளும் காலியாகவில்லை என முடிவுக்கு வந்து இரு பதவிகளும் நீடிப்பதாக கருதும் வகையில் ஜூன் 23தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், தலைமைக்கழகத்தின் பெயரில் தான் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதே தவிர, ஒருங்கிணைப்பாளரோ? இணை ஒருங்கிணைப்பாளரோ? அல்ல எனவும் கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்பதால் ஜூலை 11ஆம் தேதி கூட்டத்துக்கு அனுப்பிய நோட்டீஸ் செல்லாதது.
சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளால் தகுதி நீக்கம் ஆகியிருந்தால் மட்டுமே பதவிகள் காலியானதாகக் கூறலாம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாவிட்டால் பதவிகள் காலியாகிவிடும் எனக் கட்சி விதிகளில் கூறப்படவில்லை’ என்றும் வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கிற்கு நாளை (செப்டம்பர் 02) சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
இதையும் படிங்க: உயர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக யூ-ட்யூப் சேனல்கள் கூட்டறிக்கை