சென்னை: திமுகவை சேர்ந்த கடலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் மேல்மாம்பட்டு என்ற ஊரை சேர்ந்த தொழிலாளி கோவிந்தராசு. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொலை செய்யப்பட்டார்.
மேலும், இந்த கொலை வழக்கில் திமுக எம்பி ரமேஷ் மற்றும் அவரது நிறுவனத்தைச் சேர்ந்த 5 பேர் தான் கொலை செய்தனர் என தகவல் வெளியான நிலையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யபட்டனர். தற்போது இந்த கொலை வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி காவல்துறை, கடலூர் எம்பி ரமேஷ் உள்ளிட்டோருக்கு எதிராக கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.
கடலூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நியாயமாக நடைபெறாது எனபதால் விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும், இந்த வழக்கு விசாரணை நடைபெறும் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளதாகவும், அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் ரமேஷ் அடிக்கடி கலந்து கொள்வதால், அரசு அதிகாரிகள் தொடர்பில் உள்ளதாகவும், அரசு தரப்பு சாட்சிகளாக உள்ள முந்திரி ஆலைத் தொழிலாளர்கள் மற்றும் கிராமவாசிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் எனவும், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு அச்ச உணர்வு ஏற்படுத்தும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக காவல்துறை விசாரணையில் எம்பி ரமேஷ் தலையிடுவதாகவும், வழக்கை திசை திருப்ப முயல்வதால் அரசு வழக்கறிஞர் மீதும் நம்பிக்கை இல்லை என குற்றம்சாட்டி இருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், விசாரணை நீதிமன்றம் அமைந்துள்ள மாவட்டத்தை சேர்ந்த எம்பி என்பதே வழக்கை மாற்ற போதுமான காரணம் என கூறி, வழக்கை புதுச்சேரி நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை பிறப்பித்த பின் அரசு தரப்பு வழக்கறிஞர், வேறு மாநிலத்திற்கு (யூனியன் பிரதேசம்) மாற்ற வேண்டாமெனவும், விழுப்புரம் நீதிமன்றத்திற்கு மாற்றும்படி கோரிக்கை வைத்தார். இதையடுத்து, திமுக எம்.பிக்கு எதிரான கொலை வழக்கின் விசாரணையை கடலூர் நீதிமன்றத்திலிருந்து, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும், செங்கல்பட்டு நீதிமன்றம் இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பட்டா நிலங்களில் சடலங்களை புதைக்கலாமா?... கூடாதா? - சென்னை உயர்நீதிமன்றம் தெளிவு!