சென்னை: 2018ஆம் ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின்போது காவல் துறையினர் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி மாவட்ட நிர்வாகம், காவல் துறையைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், காவல் துறையினரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் போன்ற பிரிவுகளின்கீழ் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது.
இந்த நிலையில் தங்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்துசெய்யக் கோரி கொளத்தூர் மணி உள்ளிட்ட ஐந்து பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தனர். அந்த மனுவில் தாங்கள் ஜனநாயக ரீதியாகப் போராட்டம் நடத்தியதாகவும், பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும், ஆர்ப்பாட்டம் நடத்திய இடம் தடைசெய்யப்பட்ட இடம் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று (டிசம்பர் 14) விசாரித்த நீதிபதி டி.வி. தமிழ்ச்செல்வி, கொளத்தூர் மணி உள்ளிட்ட ஐந்து பேர் மீது மீதான வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு வழக்கு - சிபிஐக்கு மாற்றி உத்தரவு