சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில், அரசு நிர்ணயித்த அளவை விடக் கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தைச் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, சோதனைகள் நடத்தி பல்வேறு ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளது.
இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் ஆர்.எஸ்.கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் பங்குதாரர்களான சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார், புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முகம் ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த ரத்தினம் ஆகியோருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி மூவரும் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் இன்று(ஜன.5) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில், அமலாக்கத்துறையின் வழக்கில் தங்களது பெயர் சேர்க்கப்படாத நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவசர கதியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது. பின்னர் அமலாக்கத்துறை சார்பில், விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் மூவரும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், சம்மனை ரத்து செய்யக்கூடாது என்றும் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை டிச.30 ஆம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர், சுந்தர் மோகன் அமர்வு, மாநில அரசுக்குத் தான் விசாரணை செய்யும் அதிகாரம் உள்ளது.
அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை. அதனால், தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மணல் விற்பனை முறைகேடு தொடர்பாக விசாரணை செய்ய அமலாக்கத்துறைக்கு எந்த தடையும் இல்லை எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வேண்டி வழக்கறிஞர்கள் காலவரையற்ற போராட்டம்!