சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அவரது வேட்புமனுவில் சொத்து, கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை மறைத்து, தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளதாகக் கூறி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.சுப்புரத்தினம் என்பவர், கோ வாரண்டோ வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "வேட்புமனுவில் சொத்துக்களையும், கல்வித் தகுதியையும் மறைத்த செயல் தவறான நடத்தை மட்டுமல்லாமல், ஊழல் நடவடிக்கையும் ஆகும். வேட்புமனுவில் சொத்துக்கள் குறித்த விவரங்களை மறைத்ததுடன், எம்.எல்.ஏ.வாக அவர் பெற்ற ஊதியத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாகச் சேலம் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அதனால் எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வாக செயல்பட எடப்பாடி பழனிசாமிக்குத் தடை விதிக்க வேண்டும். எந்த தகுதியின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க உத்தரவிடுவதுடன், அவரை பதவி நீக்கம் செய்து, அவருக்கு வழங்கப்பட்ட ஊதியத்தைத் திரும்ப வசூலிக்க உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் கங்காபூர்வாலா மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று(டிச.19) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாகப் பதிலளிக்கத் தேர்தல் ஆணையம் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையைப் பிப்ரவரி 22ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தவிக்கும் பயணிகள்; 1.3 டன் உணவு பொருட்களுடன் விரைந்த ஹெலிகாப்டர்