சென்னை: கவிஞர் லீனா மணிமேகலை, இயக்குநர் சுசி கணேசன் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மீ டூ (Me Too) புகார் அளித்திருந்தார். இதனால், லீனா மணிமேகலைக்கு எதிராக சுசி கணேசன் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இவ்வழக்கில், லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.
ஆராய்ச்சி பணிக்காக தனக்கு பாஸ்போர்ட் வழங்கக் கோரி லீனா மணிமேகலை தொடர்ந்த வழக்கில், பாஸ்போர்ட்டை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், சுசி கணேசனின் தரப்பில், லீனா மணிமேகலை வெளிநாடு சென்றுவிட்டால் வழக்கு விசாரணை மேலும் தாமதமாகும் என வாதிடப்பட்டது.
அதன் பின்னர் நீதிபதிகள், இதுபோன்ற ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், விசாரணை நீதிமன்றம் அனைத்து விசாரணை தேதிகளிலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாமல், வழக்கறிஞர்கள் மூலம் விசாரணையைத் தொடர்ந்து நடத்தி நான்கு மாதங்களில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதேபோன்று, இந்த வழக்கில், தேவைப்பட்டால் லீனா மணிமேகலையை ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிடலாம் என்றும் அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், மேல்முறையீட்டு மனுவால் சைதாப்பேட்டை நீதிமன்ற விசாரணை தாமதமாகும் என்ற காரணத்தால், மேல்முறையீட்டுக்கு அனுமதி கோரிய இயக்குநர் சுசி கணேசனின் மனுவை ஆரம்பக் கட்டத்திலேயே தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : FIR படத்தை தடை செய்யக்கோரி இந்திய தேசிய லீக் கட்சி புகார்