சென்னை: கே.கே.நகரில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் வர்த்தகப் பிரிவு ஆய்வாளராக பணியாற்றியவர் ராஜேந்திரன். இவரிடம் 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம், நெசப்பாக்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர், அவரது வீட்டிற்கான மின் இணைப்பை, ஒற்றை கட்டை இணைப்பில் இருந்து மும்முனை (3 phase) இணைப்பாக மாற்றக் கோரி உரியக் கட்டணங்களுடன் விண்ணப்பித்திருந்தார்.
மின் இணைப்பை மாற்றுவதற்காக, ராஜேந்திரன் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து சுப்பிரமணி அளித்த புகாரின் அடிப்படையில், ரசாயன பொடி தடவிய ரூபாய் ஒட்டுகளைப் பெற்ற போது ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், ராஜேந்திரனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் இன்று (நவ.11) விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "லஞ்சம் கேட்டது உதவிப்பொறியாளர் தான். இந்த விவகாரத்தில், நான் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன். லஞ்சம் கேட்டதற்கான எந்தவித சட்டப்பூர்வ ஆதாரங்களும் இல்லாத நிலையில் எனக்குத் தண்டனை விதித்துச் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது" என வாதிடப்பட்டது.
ஆனால், ராஜேந்திரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தெளிவாகத் தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "வழக்கு தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்களை ஆய்வு செய்ததில், ராஜேந்திரனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் போதுமான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த போது 50 வயதான ராஜேந்திரனுக்கு, தற்போது 63 வயதிருக்கும். அதனால் பணி ஓய்வு பெற்றிருப்பார். இந்த அம்சங்களை கருத்தில் கொண்டு அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை ஓராண்டாகக் குறைக்கப்படுகிறது" என்று தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: தித்திக்கும் தீபாவளியை தீங்கில்லாமல் கொண்டாடுவது எப்படி? - தீயணைப்புத் துறை பயிற்சி மைய இயக்குனர் மீனாட்சி கூறும் அட்வைஸ்!