சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், சமீப காலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து, வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசிய தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக்கோரியும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதின்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் கூறி வருவதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருவதாகவும் மனுவில் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டி உள்ளார்.
கோடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜாமீன் பெற்றுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை தொடர்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:பழைய நாடாளுமன்றத்திற்கு பிரியா விடை? அடுத்த 5 நாட்கள் நடக்கப் போவது என்ன?