தமிழ்நாட்டில், அங்கீகாரமற்ற கட்சிகளுக்குத் தேர்தல் சின்னத்தை டிசம்பர் 14ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, கடந்த மக்களவைத் தேர்தல் 37 தொகுதிகளில் பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு இச்சின்னம் ஒதுக்கப்படவில்லை.
புதுவையில் மட்டும் அந்தச் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில், எம்ஜிஆர் மக்கள் கட்சி என்னும் கட்சிக்கு இந்த பேட்டரி சின்னம் ஒதுக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யத்திற்குத் தேர்தல் ஆணையம் பேட்டரி சின்னம் ஒதுக்காதது மக்கள் நீதி மய்யத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரிட் மனு தாக்கல்
இதனால், மக்கள் நீதி மய்யம் நேற்று பேட்டரி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கும்படி எம்ஜிஆர் மக்கள் கட்சி பேட்டரி சின்னத்தை பயன்படுத்துவதைத் தடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்செய்தது.
தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்
இதையடுத்து, இன்று பேட்டரி டார்ச் சின்னம் எனக்கு வேண்டாம் என எம்ஜிஆர் மக்கள் கட்சித் தலைவர் விஸ்வநாதன் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளதாகச் தெரிவித்துள்ளார்.
அறிக்கை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீரழிந்த தமிழ்நாட்டில் மீண்டும் மக்கள் திலகம் எம்ஜிஆர் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காகவே எம்ஜிஆர் மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்திவருகிறேன்.
நான் எம்ஜிஆரை நினைவுபடுத்தும் சின்னமாகிய ரோஜாப்பூ, தொப்பி, ரிக்ஷா ஆகியவற்றோடு இறுதியாக பேட்டரி டார்ச் சின்னத்தையும் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் செய்திருந்தேன்.
2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு எம்ஜிஆரை நினைவுபடுத்தும் சின்னங்களை ஒதுக்காமல் பேட்டரி டார்ச் சின்னத்தை ஒதுக்கியது ஏற்புடையது அல்ல. இந்தச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு எனக்கு விருப்பமில்லை. பேட்டரி டார்ச் சின்னம் வேண்டாமென தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் செய்துள்ளேன்.
பேட்டரி டார்ச் சின்னத்திற்குப் பதிலாக எம்ஜிஆரை நினைவூட்டும் கழுத்துப்பட்டை, படகோட்டும் மனிதன், தொப்பி, கைவண்டி, கோட், பெல்ட், செப்பல், டிராக்டர் ஆகிய சின்னங்களுக்குள் ஒன்றை எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கும்படி விண்ணப்பம் செய்துள்ளேன்.
மநீமவுக்கு பேட்டரி டார்ச் கிடைக்க வாய்ப்பு
இந்தச் சின்னம் மக்களவைத் தேர்தலின்போது தமிழ்நாட்டில் வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம், மேலும் இதே பேட்டரி டார்ச் சின்னத்தை புதுச்சேரியில் அந்தக் கட்சிக்கு ஒதுக்கி இருக்கிறார்கள். இந்தச் சின்னத்தை ஏற்றுக்கொண்டு தேர்தலில் போட்டியிடுவது எம்ஜிஆர் தொண்டன் என்னும் ஒரிஜினாலிட்டிக்கு எதிரானது" எனத் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் பேட்டரி டார்ச் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: 'டார்ச்லைட்' எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கா, மக்கள் நீதி மய்யத்திற்கா?