இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் ஊரடங்கு கால நிவாரணங்கள் ஏதும் விவசாயிகளுக்கும், விவசாய தொழிலுக்கு முறைப்படி சென்றடையாததால் வேளாண் தொழிலை மட்டும் நம்பி இருக்கும் விவசாயிகள் நிம்மதி இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடியை முறையாக செய்திடவும் அதற்கு தேவையான நீர் பாசனத்திற்கு ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கமாக இருந்துவந்தாலும், கடந்த 8 ஆண்டுகளாக நீர் பாசனத்துக்கு உரிய நேரத்தில் அணை திறக்கவில்லை. குறிப்பாக 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி அன்றும், 2017ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி அன்றும், 2018ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி அன்றும், கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதியும் மேட்டூர் அணை மிகவும் தாமதமாக திறக்கப்பட்டது. உரிய காலத்தில் குருவை விவசாயத்திற்கான நீர்ப்பாசனத்திற்கு அணை திறக்கப்படாததால் விவசாயிகள் நொடிந்து போயிருக்கிறார்கள். மேலும், விவசாயிகள் கடன்சுமையால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
மேட்டூர் அணையில் 100 அடி நீர் இருக்கிறது, வழக்கமாக 90 அடிகள் நீர் இருப்பு இருந்தாலே ஜூன் மாதம் அணை திறக்கப்படும். இப்போது கையிருப்பு நீர் இருந்தும் இதுவரை அரசு அணை திறப்பது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. ஆகவே வருகின்ற ஜூன் மாதம் 10ஆம் தேதி குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறக்க முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட வேண்டும்.