சென்னை: தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத அளவிற்கு மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளதற்கான காரணம் குறித்து மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி தொடர்ந்து நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 39 இடங்களில் அதி கனமழையும், 33 இடங்களில் மிகக் கனமழையும், 12 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டிணத்தில் 95செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
அடுத்துவரும் இரண்டு தினங்களைப் பொறுத்தவரையில், தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும். கனமழையைக் குறித்த எச்சரிக்கையைப் பொறுத்தவரையில், அடுத்துவரும் 24 மணி நேரத்திற்கு குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்குத் தரப்பட்ட “ரெட் அலர்ட்” தொடர்கிறது.
மேலும், விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மலைப்பகுதிகள் மற்றும் ராமநாதபுரத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக் கூடும்.
நாளை நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரையில், குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடற்கரைப் பகுதிகளில் அடுத்துவரும் இரு தினங்களுக்குப் பலத்த காற்றானது வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 44 செ.மீ., இந்த காலகட்டத்தின் சராசரி அளவு 42 செ.மீ., இது இயல்பை விட 5 % அதிகம் ஆகும்.
இந்த வளிமண்டல சுழற்சி காரணமாக 39 இடங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளது. பாளையங்கோட்டையில் தற்போது 442 மி.மீ., மழை பெய்துள்ளது. முன்னதாக 10.12.1931 ஆம் ஆண்டு 200 மி.மீ., மழை பெய்திருந்தது. 9.01.1963 ஆம் ஆண்டு 292.8 மி.மீ., மழை பெய்திருந்தது. டிசம்பர் மாதம் 10ஆம் தேதி 20 செ.மீ., பெய்திருந்தது. ஆண்டு முழுவதிலும் மொத்தமாக 1963ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகபட்சமாக 29 செ.மீ. மழை பெய்திருந்தது.
இந்த வருடத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபர் முதல் இன்றுவரை பதிவானது 1,050 மி.மீ., இயல்பு 516 மி.மீ., இது இயல்பை விட 103 % அதிகம் ஆகும். நெல்லையில் 135 % இயல்பை விட அதிகம். தூத்துக்குடியில் இயல்பை விட 68 % அதிகம். தென்காசியில் 80 % இயல்பை விட அதிகம்.
IMDயைப் பொறுத்தவரையில் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என மூன்று வகை எச்சரிக்கை உள்ளது. 7 செ.மீ., முதல் 11 செ.மீ., வரை மஞ்சள் எச்சரிக்கை, 12 செ.மீ., முதல் 20 செ.மீ., வரை ஆரஞ்சு எச்சரிக்கை, 21 செ.மீ.,க்கு மேல் என்பது சிவப்பு எச்சரிக்கை. இதில் 14ஆம் தேதி முதல் நேற்று வரையில் கன முதல் மிகக் கனமழை வரையிலான எச்சரிக்கை இந்த நான்கு மாவட்டங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை அதி கனமழைக்கான வாய்ப்பு அதிகப்பட்ட போது அப்கிரேட் செய்யப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வளிமண்டல சுழற்சியில் இருந்து இந்த அளவிற்கு மழை கிடையாது: மூன்றே எச்சரிக்கை தான், சிவப்பு எச்சரிக்கைக்கு மேல் எதுவும் கிடையாது. அறிவியல் ரீதியாகப் பார்க்கும் போது ஒரு வளிமண்டல சுழற்சியிலிருந்து இந்த அளவிற்கு மழை கிடையாது. அப்படி இருக்கும் பட்சத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியிலிருந்து, கனமழை முதல் மிகக் கனமழைக்கான எச்சரிக்கை அளித்திருந்தோம். நேற்று மழைக்கான வாய்ப்பு இன்னும் அதிகரித்ததால் அதிக கனமழைக்கான எச்சரிக்கை கொடுத்துள்ளோம்.
பரவலாகக் கனமழையும் பெய்துள்ளது, பரவலாக அதிக கனமழையும் பெய்துள்ளது. இதுபோல புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் போன்றவற்றால் இனிவரும் காலங்களில் இதுபோன்ற எதிர்பாராத கனமழையைச் சந்திக்க நேரிடலாம். ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ என்கின்ற அளவு அல்லது அதற்கு மேல் பெய்தால் தான் மேக வெடிப்பு என்று கூறுவோம். ஆனால் இந்த கனமழை நாள் முழுவதும் தொடர்ந்து இருந்துள்ளது. மேக வெடிப்பு என்பதற்கான வரையறை 1 மணி நேரத்தில் 10 செ.மீ., தான். ஆனால் இது அதி கனமழை, 21 செ.மீ., மேல் இருந்தால் அதி கனமழை.
14ஆம் தேதி முதலே கன முதல் மிகக் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் குமரி மாவட்டத்தின் மழை அளவு தொடர்ந்து அதிகமாகத் தான் உள்ளது. ஒரு வளிமண்டல சுழற்சியிலிருந்து இந்த அளவிற்குப் பரவலாக அதி கனமழை பெய்திருப்பது பெரிய விஷயம். இந்த வளிமண்டல சுழற்சி நேற்றைக்கு முன் தினத்திலிருந்து நேற்று வரையிலேயே கிட்டத்தட்ட 4 கிலோ மீட்டர் வேகத்தில் தான் நகர்ந்துள்ளது. இலங்கைக்குத் தென் கிழக்கிலிருந்து குமரிக்கு வந்து குமரிக்கடலிலும் தொடர்ந்து நிலவி உள்ளது.
துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளது: இதுபோல் திடீரென பெய்யும் அதி கனமழையை எதிர்காலத்தில் அறிவியல் வளரும் போது நிச்சயமாகக் கணிக்கப்படும். மழை பெய்யும் என்று சொல்லாமலே கடும் மழை பெய்த காலகட்டங்களும் உள்ளது. இந்த நிலையில் எந்த அளவிற்குத் துல்லியமாகக் கணிக்கப்படுமோ அந்த அளவிற்குத் துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளது. 14, 15, 16, என எல்லா நாட்களும் மழை குறித்து அரசுக்கு முறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
14ஆம் தேதியிலிருந்து மிகக் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நேற்று காலையில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிப்பு அப்கிரேட் செய்யப்பட்டது. ஆய்வுக்கட்டுரைகள் எல்லாம் தெரிவிப்பது என்னவென்றால் தென்பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட அதிகம், அதிலும் கனமழையாக அதிகரித்து வரக்கூடிய சூழல் உள்ளது.
குமரிக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் வெவ்வேறு அடுக்குகளிலிருந்து தொடர்ந்து சுழல் தன்மை நிலவிக் கொண்டிருக்கிறது. 1.12.2015இல் 30 செ.மீ அதி கனமழை 24 மணி நேரத்தில் பெய்திருந்தது. 6.11.2021இல் 22 செ.மீ மழை 6 மணி நேரத்தில் பெய்திருந்தது. மேலும், 2021இல் 20 செ.மீ மழை 3 மணி நேரத்தில் பெய்திருந்தது. 31.10.2022இல் 8 செ.மீ மழை 2 மணி நேரத்தில் பெய்திருந்தது. மேலும், வடகிழக்கு பருவமழைக் காலத்தில் கன மழை நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டே வருவது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
சமீப காலங்களில் வளிமண்டலங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் காரணமாக அதிகமாகக் காற்றில் ஈரப்பதம் குவிந்து அதன் இயக்கம் அதிகமாக இருப்பதால் எதிர்பாராத கன மழை நிகழ்வு ஏற்படுகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை..! 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!