காஞ்சிபுரம் மாவட்டம் நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (23). இவர் மதுரவாயலில் உள்ள ஹைடெக் ஜிஆர்சி மார்பிள் கம்பெனியில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்துவந்தார். இந்நிலையில், கோட்டூர்புரம் ஐஐடி வளாகத்தில் நடக்கும் கட்டட பணிக்காக நேற்று (பிப்.15) மாலை மார்பிள் கற்களை இறக்க விஜய், லாரியில் சென்றார்.
பின்னர், ஐஐடி வளாகத்தில் உள்ள மின் அறிவியல் துறை கட்டடம் அருகே மார்பிள் கற்களை இறக்க ஓட்டுநர் லாரியை நிறுத்தினார். அப்போது, லாரியிலிருந்து கீழே இறங்கிய விஜய் லாரியில் உள்ள கற்களை இறக்க சென்றார். இதனை கவனிக்காத லாரி ஓட்டுநர் மாரியப்பன், லாரியை பின்பக்கமாக மண் மேட்டில் ஏற்றியதில் மார்பிள் கற்கள் சரிந்து விஜய் மீது விழுந்தன.
விஜய் அலறும் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஐஐடி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து விஜய்யின் சகோதரர் விக்னேஷ்வரன், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில், லாரி ஓட்டுநர் மாரியப்பன் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நஞ்சாகிறதா ஆற்று நீர் - 7000 வாத்துக் குஞ்சுகள் உயிரிழந்த சோகம்!