சென்னை: கரோனா இரண்டாவது அலையால் பொதுமக்கள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக மாணவர்களுக்கு நடத்தப்பட்ட நேரடி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டுவந்தன.
இந்த நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்துள்ளதால் மருத்துவக் கல்லூரிகளை மீண்டும் ஆகஸ்ட் 16ஆம் தேதிமுதல் திறந்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதி அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதற்கான பாதுகாப்பு விதிமுறைகளை மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்திருந்தது.
கல்லூரிக்கு வரும்போது சான்றிதழ் அவசியம்
கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மருத்துவக் கல்லூரிகளில் இன்று இரண்டாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரையிலான மருத்துவ மாணவர்கள், மருத்துவம் சார்ந்த மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இது குறித்து சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி கூறும்போது, "மருத்துவக் கல்வி இயக்குநரகம் பிறப்பித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கல்லூரிகள் இன்றுமுதல் திறக்கப்பட்டுள்ளன.
கல்லூரிக்கு வரும் மாணவர்கள் 48 மணி நேரத்திற்கு முன்பாக கரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று சான்று கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் இரண்டு தடுப்பு ஊசிகளையும் போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான சான்றிதழையும் ஒப்படைக்க வேண்டும்.
பெற்றோருக்கும் சான்றிதழ் அவசியம்
மேலும் வகுப்பறையில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வகுப்பறைகளில் நோய் பாதிப்பைக் குறைக்கும் வகையிலும், நோய் பாதிப்பு ஏற்படாத வகையிலும் மாணவர்களுக்கு பாதுகாப்பு முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாணவர்களைப் பெற்றோர் பார்ப்பதற்கு அனுமதி இல்லை. அவ்வாறு பார்க்க வரும் பெற்றோரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை ஒப்படைக்க வேண்டும். மாணவர்கள் கூட்டமாக அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அவர்கள் உணவினைப் பெற்றுக்கொண்டு தங்கள் அறையில் சென்று உண்ண வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய சாதனையாளர் ஸ்டாலின்! - வைகோ