சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழிற்கூடங்கள் ஒருங்கிணைப்பு மையத்தின் சார்பில் பொறியியல் படிப்பில் மெக்கானிக்கல் துறை தேர்வு செய்யும் மாணவிகளுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்த ஆலோசனை கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இந்தக் கருத்தரங்கில், வேலைவாய்ப்புகள் குறித்த அறிக்கையை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா வெளியிட, அதனை ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணன் சுந்தர்ராஜன் பெற்றுக்கொண்டார். இதில், அரசுப் பள்ளிகளில் பயிலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா, ''பொறியியல் படிப்புகளில் உற்பத்தித் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்துள்ளது. அதனால், பெரும்பாலான பணிகள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யப்படுகின்றன.
எனவே மாணவிகள் அதிக அளவில் உடல் உழைப்பு கொடுத்து கடுமையான பணியை செய்ய வேண்டியதில் இருந்து மாறுபாடு ஏற்பட்டுள்ளது. பெண்கள் அதிக அளவில் மெக்கானிக்கல் படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும்'' என அவர் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணன் சுந்தர்ராஜன், ''தற்போதைய நவீன தொழில்நுட்பங்களின் மூலம் பெண்கள் அதிகளவில் உடல் உழைப்பினை அளித்து பணிபுரிய வேண்டிய சூழ்நிலை மாறியுள்ளது. எனவே அதிக அளவில் மாணவிகள் மெக்கானிக்கல் பிரிவை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமையும்'' என அவர் தெரிவித்தார்.