சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் ம.தி.மு.க சார்பாக, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஆளுநர் செயல்படுவதாகவும், பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்தி தற்போது 9 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழை எதிர்நோக்கி காத்திருக்கும் அவல நிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியே காரணம் என்றும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
உலகப் பொதுமறை நூலான திருக்குறளுக்கு காவி சாயம் பூசும் வகையில் தொடர்ந்து பேசி வருவதும், ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிப்பெயர்த்த ஜி.யு.போப்பை விமர்சனம் செய்வதும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வாடிக்கை என்றும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தும், 45-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தும் உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ஆன்லைன் ரம்மி அவசர தடைச் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய பெருமைக்குரியவர் ஆர்.என்.ரவி என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த ஜூன் 14ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ம.தி.மு.கழகத்தின் 29 ஆவது பொதுக்குழுவில், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்குமாறு குடியரசுத் தலைவரிடம் கேட்டுக் கொள்ளும் கையெழுத்து இயக்கத்தினை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஏன் நீக்க வேண்டும் என்பதை பொதுமக்களிடம் விளக்கிச் சொல்லி அவர்களிடம் கையெழுத்து பெரும் இயக்கத்தினை ம.தி.மு.க இன்று (ஜூன்20) முதல் ஜூலை 20ஆம் தேதி வரை நடத்த உள்ளது.
இந்த நிலையில், இதற்கான அறிமுக நிகழ்வு சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன்20) நடைபெற்றது. அதில் பேசிய வைகோ, “ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் பொறுப்பில் இருக்க தகுதியற்றவர். அவரை அந்த பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என கையெழுத்து இயக்கத்தை தொடங்கி இருக்கிறோம். மத்திய அரசு போட்ட பிச்சைதான் ஆளுநர் பதவி. சனாதன தர்மம் தான் இந்தியா, அதிலிருந்து உருவானது தான் இந்தியா என ஆளுநர் பேசுகிறார். இது யாரும் செய்யாத புதிய கண்டுபிடிப்பு. இதெல்லாம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது.
ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டின் நலனுக்கு விரோதமாக பேசி வருகிறார் ஆளுநர். தமிழ்நாட்டுக்கு நம்பர் ஒன் விரோதி ஆளுநர் ஆர்.என்.ரவி தான். நாகாலாந்து மக்கள் இவர் செய்த நாசகார வேலைக்காக கிளர்ந்து எழுந்துதான் அவரை இங்கே கொண்டு வந்து போட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களும் கிளர்ந்து எழ வேண்டும் என்பதற்காக தான் இந்த கையெழுத்து இயக்கம். தமிழ்நாட்டிற்கு விரோதமான செயலை செய்து கொண்டு இருக்கிறார் ஆளுநர்.
ஆளுநரை நீக்குவதற்காக கையெழுத்து இடுங்கள் என பொது மக்களுக்கு வேண்டுகோள். ஆளுநர் பதவியே இருக்க கூடாது, இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும். தமிழக ஆளுநர் நீக்கபட்டால் தான் தமிழ்நாட்டில் ஜனநாயகம் ஜனநாயகமாக இருக்கும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: "செந்தில் பாலாஜி மீது தனியாக வழக்கு" - கிருஷ்ணசாமி ஆவேசம்!