சென்னை: மொரிசியஸ் குடியரசு நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கைலேஷ் குமார் சிங் ஜகுத்பால் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஆகஸ்ட் 23) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து, தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகள் மற்றும் மருந்து மற்றும் உபகரணங்கள் கொள்முதல் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கட்டமைப்புகள் குறித்தும் விளக்கப்பட்டது. மொரிசியஸ் நாட்டிற்கு எதிர்காலத்தில் தேவைப்படும் மருந்துகளை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்துதர இயலுமா என்று கேட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரிடமும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடமும் இது தொடர்பாக பேசி முடிவெடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
மொரிசியஸ் சுகாதாரத் துறை அமைச்சருடன் வந்துள்ள குழு அண்ணா நகரில் இருக்கின்ற மருந்து கிடங்கை நாளை பார்வையிட உள்ளது. தொடர்ச்சியாக ஏழும்பூரில் உள்ள மருத்துவ சேவை கழகத்தின் அலுவலகத்திற்கு சென்று அதனை பார்வையிட உள்ளனர். ஏற்கனவே அகர்வால் மருத்துவமனை மற்றும் காவேரி மருத்துவமனை ஆகிய இரண்டு தனியார் மருத்துவமனையை இந்த குழு பார்வையிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் போதுமான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 2286 நகர்புற மற்றும் ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னாள் தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ, துணை சுகாதார நிலையங்களிலோ பாம்புக்குடி மற்றும் வெறிநாய்கடிக்கான மருந்துகள் இல்லாத நிலை இருந்தது. தற்போது அந்நிலை முற்றிலும் மாறியுள்ளது.
'இதயம் காப்போம்' என்ற திட்டத்தின்படி 8713 துணை சுகாதார நிலையங்களிலும், 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாரடைப்பிற்கான அறிகுறிகளுடன் யாராவது வந்தால் அவர்களுக்கு லோடிங் டோஸ் (Loading dose) எனப்படும் மாத்திரைகள் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 1141 பேர் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 181 பேர் துணை சுகாதார நிலையங்களிலும் மாத்திரைகளை பெற்று பயனடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: பிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடு? - விசாரணை நடத்த மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்!
சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். ஆனால் ஆளுநர் அதற்கு இதுவரை இசைவு தராமல் உள்ளார். இசைவு கிடைக்க பெற்றவுடன் அந்த நிதியாண்டிலேயே ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அண்ணா நகரில் உள்ள அண்ணா சித்த மருத்துவமனை வளாகத்தில் அமைப்பதற்கும், மாதவரம் பால் பண்ணையில் 25 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு நிலமாற்றம் செய்யும் பணிகள் முழுமைபெற்றுள்ளது” என தெரிவித்தார்.
பின்னர், மொரிசியஸ் குடியரசு நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கைலேஷ் குமார் சிங் ஜகுத்பால் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மொரிசியல் நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பழங்காலங்களில் இருந்தே நல்ல நட்பு உள்ளது. எங்கள் நாட்டின் பிரதமரின் ஆலோசனையின் படி தமிழ்நாட்டில் நடைபெறும் G20 மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வந்தோம். உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆலோசனைப்படி, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் செயல்பாட்டினை அறிந்து கொள்வதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சந்தித்தேன்.
இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும், வெற்றிகரமாகவும் அமைந்தது. தமிழ்நாடு மருத்துவத் துறையில் பன்மடங்கு வளர்ந்த மாநிலமாக உள்ளது, மருத்துவ சேவைகள் மிகச்சிறப்பாக இங்குள்ள மக்களுக்கு கிடைக்கிறது. தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகள், மருந்து மற்றும் உபகரணங்கள் கொள்முதல் குறித்து தெரிந்துகொள்வதற்கு பயனுள்ளதாக அமைந்தது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "தமிழக அரசின் பொது பாடத்திட்டத்தை எதிர்ப்பது வரம்பு மீறிய செயல்" - ஆளுநரை திரும்பப் பெற ஜனாதிபதிக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை