தமிழ்நாடு அரசு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைகழகத்தில் இணைப்பு பெற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு விதிமுறைகளின்படி, தேர்வு மையங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வில் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி, மாதா மருத்துவக் கல்லூரி ஆகிய இருக்கல்லூரிகளின் தேர்வு மையங்களில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.
தேர்வு ஒழுங்குநடவடிக்கை குழு கூட்டத்தின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்ட மாதா மருத்துவக் கல்லூரிக்கு மூன்று ஆண்டுகளுக்கும், ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரிக்கு ஓராண்டும் தேர்வு மையங்களை ரத்து செய்வதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மாதா மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்வுகளில் முறைக்கேட்டில் ஈடுபட்ட மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்படமாட்டாது. அவர்களுக்கான மறுதேர்வு 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் அடுத்து வரவுள்ள மூன்று தேர்வுகள்- நவம்பர் 2019 (துணைத் தேர்வு), பிப்ரவரி 2020, ஆகஸ்ட் 2020 ஆகியவற்றுக்கான தேர்வு மையத்தை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் செயல்படும் அரசு, சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், நர்சிங் மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான தேர்வுகளை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திவருகிறது.
தேர்வு மையங்களில் எவ்வித முறைகேடும் நடக்கக்கூடாது என்பதற்காக தேர்வு நடைபெறும் அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி பதிவு செய்யப்பட்டது. அந்த வீடியோக்கள் பல்கலைக்கழகத்தால் ஆய்வு செய்யப்பட்டதன் மூலம், மேற்கூறிய கல்லூரிகள் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்வில் அதிக அளவில் மாணவர்கள் காப்பி அடித்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிக்கலாமே: நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மூவரின் பிணை மனு தள்ளுபடி!