சென்னை, பெரம்பலூர் ஜவகர் நகர் ஐந்தாவது தெருவில் திலகா அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் திவ்யா. அவரது கணவர் கணேஷ் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் திவ்யாவின் கணவர் கணேஷ் பணி முடிந்து தனது நண்பர்களோடு திரைப்படம் செல்வதாகக் கூறிவிட்டு இரவு தாமதமாக வந்துள்ளார். அன்று நள்ளிரவு வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கவே தன் கணவர் வந்துள்ளதாக எண்ணி திவ்யா கதவைத் திறந்துள்ளார்.
அப்போது, முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் திவ்யாவின் முகத்தில் ஸ்பிரே அடித்து வாயல் துணியை வைத்து அடைத்து அவரது கழுத்திலிருந்த ஐந்து சவரன் தாலி செயினை பற்றித் தப்பியோடியுள்ளனர்.
வீடு திரும்பிய திவ்யாவின் கணவன், திவ்யா மயக்கமுற்ற நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் திவ்யாவை எழுப்பி நடந்ததைக் கேட்டறிந்தார். இது குறித்து கணேஷ் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து உண்மையிலேயே முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டினார்கள் அல்லது வேறு ஏதும் பிரச்சினை உள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எட்டு வீடுகள் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.