அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும், அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் சூரப்பாவை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆளுநர் மாளிகை முன்பு இன்று (அக். 20) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மசோதாவை தமிழ்நாடு அரசு ஆளுநரிடம் கொடுத்துள்ளது. ஆனால் 45 நாட்கள் ஆகியும் ஆளுநர் அமைதியாக இருக்கிறார். இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை எந்த அரசியல் கட்சிகளும் எதிர்க்கவில்லை. மக்களிடையே இந்த மசோதாவிற்கு வரவேற்பு இருக்கும் நிலையில் ஆளுநர் ஏன் மெளனம் காக்கிறார் ”எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், “பாஜக ஆளும் கர்நாடகா மாநிலத்தில்கூட காங்கிரஸ் கொண்டுவந்த நீட் தேர்வு மாணவர் சேர்க்கையில் கர்நாடகாவில் 15 சதவீதம் கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. அப்படி இருக்கும்போது இங்கே தமிழ்நாடு ஆளுநர் ஏன் இதை மறுக்கிறார். அரசியலில் சட்டம் பிரிவு 200 சாரத்தின்படி ஒரு மாநில அரசு சட்டப்பேரவையில் ஒரு மசோதா நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்க வேண்டும்.
ஆளுநர் அரசியல் சட்டப்படி செயல்படுகிறாரா அல்லது மோடி, அமித்ஷா சொல்படி செயல்படுகிறாரா என கேட்க விரும்புகிறேன். இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் ஆளுநரை மாற்ற வேண்டும் என சிபிஎம் போராட்டம் நடத்தும் என தெரிவித்தார்.
மேலும் அண்ணா பல்கலைக்கழகம் விவகாரத்தில் ‘சூரப்பா நீ யாரப்பா’ என்று அரசு முன்பே கேட்டிருக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க...விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் : நடவடிக்கை எடுக்கக்கோரி கனிமொழி வலியுறுத்தல்!