சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி(34). இவருக்கு கீதா(29) என்ற மனைவியும், ஹேமதாசன்(5), மித்துஸ்ரி(3) ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு திடீரென கீதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்த கீதாவின் தாய் நிர்மலா, மருத்துவமனைக்குச் சென்று மகளின் உடலைப் பார்த்தபோது, அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், தன் மகள் கீதாவின் இறப்பிற்கு மருமகன் குடும்பம்தான் காரணம் என்றும், வரதட்சணை கேட்டு கீதாவை அவர்கள் கொடுமைபடுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, புகாரை ஏற்றுக்கொண்ட வண்ணாரப்பேட்டை காவல்துறையினர், கீதாவின் உடற்கூறாய்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர். மேலும், கீதா - பாலசுப்ரமணி தம்பதிக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியுள்ளதால், இந்த சம்பவம் தொடர்பாக தண்டையார்பேட்டை ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.